ரோகித் சர்மா 32வது சதம் PT
கிரிக்கெட்

’பத்திகிச்சு ஒரு ராட்சத திரி..’ 32வது ODI சதமடித்தார் ரோகித் சர்மா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய 32வது ODI சதத்தை பதிவுசெய்து அசத்தினார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்ற இந்திய அணி இங்கிலாந்தை மொத்தமாக ஆட்டிப்படைத்தது.

இந்தியா - இங்கிலாந்து

அதற்குபிறகு தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுவருகிறது.

32வது ஒருநாள் சதமடித்தார் ரோகித் சர்மா..

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் பெஞ்ச் செய்யப்பட்டு விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுத்தார். வருண் சக்கரவர்த்தி தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பென் டக்கெட்டும், ஜோ ரூட்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதமடித்தனர். டக்கெட் 65 ரன்கள், ஜோ ரூட் 69 ரன்கள், ஹாரி ப்ரூக் 31, பட்லர் 34 மற்றும் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் என அடிக்க, 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் சேர்த்தது.

305 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். இரண்டு வீரர்களும் அரைசதமடித்த நிலையில், சுப்மன் கில்லை ஒரு அசத்தலான யார்க்கர் மூலம் 60 ரன்னில் வெளியேற்றினார் ஓவர்டன். அதற்குபிறகு வந்த விராட் கோலி 5 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியை நிறுத்தாத ரோகித் சர்மா 9 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 76 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இது அவருடைய 32வது ஒருநாள் சதமாக பதிவுசெய்யப்பட்டது.