rohit sharma - hardik pandya web
கிரிக்கெட்

"He Is My Man.." ஹர்திக் இல்லையென்றால் வெறும் கையோடு நின்றிருப்போம்! - ரோகித் ஓபன் டாக்

2024 டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் சிறந்த செயலை பாராட்டிய ரோகித் சர்மா, அவர் இல்லையென்றால் வெறும் கையோடு நின்றிருப்போம் என தன்னுடைய உணர்வை பகிர்ந்துகொண்டார்.

Rishan Vengai

தற்போதும் 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மேஜிக் தருணமாகவே நினைவில் இருக்கிறது. கடைசி 30 பந்துக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை, களத்தில் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இருக்கிறார்கள் எனும்போது ஆட்டம் 99.9% தென்னாப்பிரிக்காவின் கைகளிலேயே இருந்தது.

ஒரு ஓவருக்கு 30 ரன்களை அடிக்கும் டி20 வடிவத்தில் 30 பந்தில் 30 ரன்களை அடிக்கவிடாமல் இழுத்துப்பிடித்ததெல்லாம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். அதிலும் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என்ற 3 வீரர்களின் பெயர்கள் தான் முன்னிலை பெற்றிருக்கும். இந்த 3 வீரர்களின் கால்கள் தான் தலைக்குமேல் சென்ற அழுத்தத்தின் போதும் நடுங்காமல் இந்தியாவிற்காக நிலைத்து நின்றது.

பும்ராவின் கம்பேக் ஓவர், சூர்யாவின் அசாத்தியமான பவுண்டரிலைன் கேட்ச், ஹர்திக் பாண்டியாவின் நம்பமுடியாத நம்பிக்கை என அனைத்தும் இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கி கொடுத்தன.

இந்த சூழலில் 2024 டி20 உலகக்கோப்பை குறித்து நினைவு கூர்ந்த கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

வெறும் கையோடு நின்றிருப்போம்..

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் “சாம்பியன்ஸ் வாலி ஃபீலிங் பிர் சே” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்.

2024 டி20 உலகக்கோப்பையை வென்றது மிகவும் உணர்வுபூர்வமான தருணம் என்று பேசிய ரோகித் சர்மா, “ஹர்திக் பாண்டியா என்னுடைய மேன், எனக்காகவும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் இல்லையெனில் போட்டியில் தோல்வியடைந்து வெறும் கையோடு நின்றிருப்போம்” என்று பேசியுள்ளார் ரோகித் சர்மா.