2027 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிவரை முன்னேறிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது.
ஒருநாள் உலகக்கோப்பை வெல்வதை லட்சியமாக கொண்டிருக்கும் ரோகித் சர்மாவிற்கு அது இடியாக அமைந்தாலும், அதிலிருந்து மீண்டுவந்து 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் இந்திய கேப்டனாக வென்று சாதனைபடைத்தார்.
இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றபிறகு டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடிவருகிறார்.
இந்த சூழலில் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவை பதவியிலிருந்து நீக்கியிருக்கும் தேர்வுக்குழு, சுப்மன் கில்லை புதிய ஒருநாள் கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் ரோகித் சர்மா விரைவில் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்றும், 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என்றும் பேசப்பட்டுவருகிறது.
38 வயதாகும் ரோகித் சர்மா 2027 உலகக்கோப்பையின் போது 40 வயதை கடந்துவிடுவார் என்பதால், அவருடைய உடற்தகுதியை கருத்தில் கொண்டு தேர்வுக்குழு கேப்டன்சி பதவியை பறித்துள்ளது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால், தொடர்ந்து பயிற்சியில் இருக்க முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் ரோகித் சர்மா 2027 உலகக்கோப்பையில் விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நீடித்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் ரோகித் சர்மா உலகக்கோப்பையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்காக உடல் எடையை 10 கிலோவரை குறைத்திருக்கும் ரோகித் சர்மா, சிறுவர்கள் உடனான உரையாடல் ஒன்றில், அடுத்த உலகக்கோப்பை எப்போது என சிறுவன் ஒருவர் கேட்க, 2027 என்கிறார் ரோகித் சர்மா. அதில் விளையாடுவீர்களா? என சிறுவன் கேட்க, விளையாட விரும்புகிறேன் என்று பதிலளித்துள்ளார் ரோகித் சர்மா.