2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவார் என சொல்லப்பட்ட ரோகித் சர்மாவிற்கு தற்போது மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவரும் ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் வடிவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடிவருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் தோல்வியடைந்தபிறகு ரோகித் சர்மாவிடம் இருந்து டெஸ்ட் கேப்டன்சியை கைப்பற்றிய சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன்செய்ததோடு 754 ரன்கள் குவித்த நிரந்தர கேப்டன் என்ற முத்திரையை பெற்றுள்ளார்.
தொடர்ந்து டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில், ரோகித் சர்மாவின் ஒருநாள் கேப்டன்சியையும் விரைவில் பெறுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவார் என சொல்லப்பட்ட ரோகித் சர்மாவிற்கு தற்போது மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம்.
ஒரேயொரு வடிவத்தில் மட்டுமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடிவருவதால், நேரடியாக உலகக்கோப்பை சென்று விளையாட முடியாது என உள்ளூர் போட்டிகளில் விளையாட சொல்லப்பட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலில், இந்தியாவின் ஒருநாள் கேப்டனான ரோகித் சர்மா இந்தியா ஏ அணியில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் விளையாடவிருப்பதாக சொல்லப்படுகிறது.
மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.
ரோகித் சர்மா தன் வாழ்நாளின் சிறந்த இலக்காக ஒருநாள் உலகக்கோப்பை வெல்வதை குறிக்கோளாக கொண்டிருக்கும் சூழலில், இந்தியா ஏ அணியில் விளையாட வைப்பது அவரை ஓரங்கட்டும் வேலை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.