Rohit Sharma
Rohit Sharma Twitter
கிரிக்கெட்

ராஜ்கோட்டில் சிக்சர் மழை பொழிந்த ரோகித்! ஒரு நாட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக புதிய சாதனை!

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் 2 அணிகளும் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளதால், இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையேயான மோதலானது ரசிகர்கள் இடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Smith - Marsh

முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றிய நிலையில், தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்யும் எண்ணத்தில் மூன்றாவது போட்டியில் களமிறங்கியது ஆஸ்திரேலியா. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் வீரர்களான வார்னர், மிட்சல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனே முதலிய 4 வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால், 50 ஓவர் முடிவில் 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக 84 பந்துகளில் 13பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 96 ரன்களை குவித்தார் மிட்சல் மார்ஸ்.

அதிக சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

353 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். ஸ்டார்க், ஹசல்வுட், கம்மின்ஸ் என ஆஸ்திரேலியாவின் அனைத்து ஸ்டார் பவுலர்களையும் வெளுத்து வாங்கிய ரோகித், ஓவருக்கு ஒரு சிக்சர் என பறக்கவிட்டு மிரட்டிவிட்டார்.

Rohit Sharma

6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 57 பந்துகளில் 81 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, ஓடிஐ கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார். சிக்ஸ் ஹிட்டிங்கிற்கு பெயர் போனவரான ஹிட்மேன், சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 550 சிக்சரை பதிவு செய்தார். இதன் மூலம் ஒரு நாட்டில் மட்டும் அதிக சர்வதேச சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் மார்டின் கப்திலை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு வரை நியூசிலாந்து மண்ணில் மார்டின் கப்தில் அடித்த 256 சிக்சர்களே ஒரு நாட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாக இருந்தது. தற்போது அதை முறியடித்திருக்கும் ரோகித் சர்மா இந்திய மண்ணில் 260 சிக்சர்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் 230 சிக்சர்களுடன் பிரண்டன் மெக்கல்லம், 228 சிக்சர்களுடன் க்றிஸ் கெய்ல், 186 சிக்சர்களுடன் மகேந்திர சிங் தோனியும் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

க்றிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனை படைக்க 3 சிக்சர்களே மீதம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் 6 சிக்சர்கள் அடித்ததன் மூலம் 551 சர்வதேச சிக்சர்களை பதிவு செய்துள்ளார் ரோகித் சர்மா. இதன்மூலம் அதிக சர்வதேச சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் க்ரிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனை படைக்க இன்னும் 3 சிக்சர்களே மீதம் உள்ளன.

Rohit Sharma

இந்த பட்டியலில் 553 சிக்சர்களோடு க்ரிஸ் கெயில் முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் 551 சிக்சர்கள், ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்கள், பிரண்டென் மெக்கல்லம் 398 சிக்சர்கள், மார்டின் கப்தில் 383 சிக்சர்கள் என அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.