rohit sharma
rohit sharma twitter
கிரிக்கெட்

தொடர்ந்து சிக்ஸர் மழை: உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

Prakash J

உலகக்கோப்பை: முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து

இந்தியாவில் கடந்த ஒருமாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற தொடரில் அரையிறுதியில் விளையாட இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதிபெற்றன. இந்நான்கு அணிகளில் வெற்றிபெறும் 2 அணிகள், இறுதிப்போட்டியில் மோதும்.

இதையடுத்து, இதன் முதலாவது அரையிறுதியில், இன்று (நவ.15) இந்தியா - நியூசிலாந்து ஆகிய அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெறும் நோக்கில் களமிறங்கியுள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு

உலகக்கோப்பை: அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் முதல் இடம் பிடித்த ரோகித் சர்மா

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸைத் தொடங்கினர். எப்போதும்போல அதிரடியில் கலக்கிய ரோகித் சர்மா, இன்றைய போட்டியிலும் சிக்ஸர் மழை பொழிந்தார்.

நியூசிலாந்து போட்டிக்கு எதிராக அவர் 3-வது சிக்ஸரை அடித்ததன்மூலம் உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்தார். ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், 2003 முதல் 2019 வரை 34 இன்னிங்ஸில் 49 சிக்ஸர்களை விளாசியிருந்தார். அவரது சாதனையை இன்று ரோகித் சர்மா தகர்த்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் ஒன்றிலும் சிக்ஸரில் சாதித்த ரோகித் சர்மா

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா (51), முதல் இடத்திலும், கிறிஸ் கெய்ல் (49), 2வது இடத்திலும், கிளன் மேக்ஸ் (43) 3வது இடத்திலும் உள்ளனர். மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் அதிக சிக்ஸர்கள் விளாசிய பட்டியலிலும் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். தவிர, உலகக்கோப்பை தொடர் ஒன்றிலும் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரோகித்தே முதல் இடத்தில் உள்ளார். அவர் நடப்புத் தொடரில் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கிளன் மேக்ஸ்வெல் 22 சிக்ஸர்களுடன் 2வது இடத்திலும், குயிண்டன் டி காக் 21 சிக்ஸர்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அதேநேரத்தில் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் (28) முதல் இடத்தில் இருக்க, கிறிஸ் கெய்ல் 26 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: IND vs NZ | WC SemiFinals | இந்திய அணி பேட்டிங்... டாஸ் வென்ற ரோஹித் சர்மா கூறியது என்ன?

சுப்மன் கில் - விராட் கோலி பொறுமையான ஆட்டம்

இன்றைய போட்டியில் அதிரடியில் கலக்கிய ரோகித், விரைவாக அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 9வது ஓவரில் செளதி பந்தை சிக்ஸருக்கு தூக்க, அதை வில்லியம்சன் கேட்ச் பிடித்தார். இதனால் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பிறகு, சுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார்.

பொறுமையாக விளையாடி வரும் சுப்மன் கில், 41 பந்துகளில் அரைசதம் அடித்து ஆடி வருகிறார். தற்போது இந்திய அணி 22.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களுடனும், விராட் கோலி 42 பந்துகளில் 35 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! என்ன காரணம்?