ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை எட்டிய மிக வயதான வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர், 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கனவுடன் இத்தொடரில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர், உடல் எடையைக்கூட 15 கிலோவுக்கு மேல் குறைத்திருந்தார். தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மாவும் இடம்பெற்றிருந்தார். 3 ஒருநாள் போட்டிகள் இந்த தொடரில் இந்திய அணி தொடரை இழந்தபோதிலும், கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தது.
தவிர, இந்தப் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்து, தாம் மீண்டும் நட்சத்திர வீரர் என்பதை நிரூபித்தார். அக்டோபர் 25 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் 125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே தொடரில், அடிலெய்டில் நடைபெற்ற 2வது போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் மற்றும் தேர்வுக் குழுவினர், ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருந்தார்.
இதன்மூலம், இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி, தனது 38வது வயதில் முதலிடத்தைப் பிடித்தார். இந்த வயதில் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ஒருவர் முதல் இடம்பிடிப்பது இதுவே முதல் முறை. அதாவது, ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக அதிக வயதுடைய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். அவர், இந்தப் பட்டியலில் 781 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, இந்த இடத்தில் கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர், இந்தத் தொடரில் சொதப்பியதால் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் சச்சின், தோனி, கோலி, கில் ஆகியோருக்குப் பிறகு நம்பர் ஒன் வீரரான ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி, இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட் முறையில் பெவிலியன் திரும்பியிருந்தாலும், 3வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து விமர்சனங்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம், அவர் 5வது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார்.