சிறந்த ஸ்பின் அட்டாக்கை வைத்திருக்கும் இந்திய அணிக்கு எதிராக, ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடக்கூடிய நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 4வது ஸ்பின்னராக களம்கண்ட வருண் சக்கரவர்த்தி, தன்னுடைய மிஸ்ட்ரி சுழற்பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். பெரும்பாலான வீரர்களுக்கு அவரை எப்படி எதிர்கொள்வது என்பதே தெரியவில்லை.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஸ்பின்னரை சிறப்பாக விளையாடும் டேரில் மிட்செல் vs வருண் சக்கரவர்த்திக்கு இடையே சிறந்த மோதல் இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்திருந்தார். ஆனால் டேரில் மிட்செல்லுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்திய வருண் சக்கரவர்த்தி மிரட்டிவிட்டார்.
வருண் சக்கரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா, 4 ஸ்பின்னர்களுடன் செல்லும் தங்களுடைய யுக்தியில் தெளிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை அரையிறுதியில் எதிர்கொள்வதற்கு முன்பாக பேசியிருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, வருண் சக்கரவர்த்தியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இதுகுறித்து பேசியிருக்கும் கேப்டன், "வருண் சக்கரவர்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் நாங்கள் கேட்ட அனைத்தையும் செய்தார். அவரிடம் ஏதோ வித்தியாசம் இருக்கிறது. அவர் அதைச் சரியாக செய்யும்போது, எதிரணி வீரர்களை வீழ்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். எங்களுடைய பேட்ஸ்மேன்களில் சிலரால் கூட அவரை கணிக்க முடியவில்லை, அது கவனத்தை ஈர்த்துள்ளது.
2021-ல் அறிமுகம் பெற்றாலும் அப்போது அவரிடம் அனுபவமின்மை இருந்தது. ஆனால் தற்போது அவர் உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல், சர்வதேச டி20 கிரிக்கெட் என நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவரிடம் முன்பை விட அனுபவம் அதிகமாகவே இருக்கிறது, பந்துவீச்சை புரிந்துகொள்கிறார், ஏதாவது தவறாக செய்தால் உடனடியாக அதை சரிசெய்துகொள்கிறார்.
நாங்கள் கேட்ட அனைத்தையும் அவர் செய்தபிறகு, தற்போது அரையிறுதியில் என்ன கலவையை கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு எங்களுடையது. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசைக்கு ஏற்ப நாங்கள் அதை செய்வோம்.
வருண் சக்கரவர்த்தி போன்ற திறமையான வீரர்களை பார்த்தால், நீங்கள் அவரை உடனடியாக பயன்படுத்திகொள்ள வெட்கப்படக்கூடாது. சில போட்டிகளுக்கு சிலதிறன்கள் தேவையானது, அது அவரிடம் இருக்கிறது. இந்த முடிவால் சிலரின் புருவங்கள் உயரலாம், கேள்விகள் எழலாம், ஆனால் முடிவில் அணியின் வெற்றிக்கு எது தேவையோ அதுதான் முக்கியமானது” என்று ரோகித் சர்மா அணியின் மனநிலையை தெளிவாக பகிர்ந்துகொண்டுள்ளார்.