ரிஷப் பண்ட் web
கிரிக்கெட்

”மொத்த இந்தியாவும் மனம் உடைந்தது..” - விமான விபத்து குறித்து எமோசனலாக பேசிய பண்ட்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மக்கள் குறித்து பேசிய ரிஷப் பண்ட், ஒட்டுமொத்த இந்தியாவும் மனமுடைந்தது, எங்களால் முடிந்த ஒரே நம்பிக்கை மக்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுக்கொடுக்க முயற்சிப்போம் என்று எமோசனலாக பேசினார்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி ஜுன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல், சுப்மன் கில் கேப்டன் மற்றும் ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் இங்கிலாந்தில் அணியை வழிநடத்தவிருக்கின்றனர்.

இந்நிலையில் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ரிஷப் பண்ட், அணியின் பிளேயிங் லெவன் குறித்தும், மூத்தவீரர்கள் இல்லாதபோது எங்களுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் பேசினார்.

ரிஷப் பண்ட்

மேலும் அகமதாபாத் விமான விபத்தில் பலநூறு மக்கள் உயிரிழந்தபோது மொத்த நாடே மனமுடைந்ததாக பேசிய அவர், மக்களின் மகிழ்ச்சியை மீட்டு எடுத்துவர முயற்சிப்போம் என்று பேசினார்.

மொத்த இந்தியாவும் மனமுடைந்தது..

அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசிய ரிஷப் பண்ட், “அகமதாபாத் விமான விபத்தை பார்த்து முழு இந்தியாவும் வருத்தமடைந்தது, மனமுடைந்தது. அதே நேரத்தில், எங்கள் தரப்பிலிருந்து செய்யநினைக்கும் ஒரே விஷயம் என்னவென்றால், இந்தியாவை மீண்டும் மகிழ்ச்சியடையச் செய்வது எப்படி என்பதுதான், அதை மீண்டும் கொண்டுவர முயற்சிப்போம் என்று உறுதியாக கூறுகிறேன். விபத்தில் நடந்தது எல்லாம் அதிகமான உணர்வுகளை கொடுத்திருக்கும், ஆனால் நாட்டிற்காக எங்கள் சிறந்த கால்களை முன்னோக்கி வைக்க விரும்புகிறோம்" என்று எமோசனலாக பேசினார்.

மேலும் பிளேயிங் லெவன் குறித்து பேசிய பண்ட், ”சுப்மன் கில் நம்பர் 4 மற்றும் நான் நம்பர் 5 இடத்தில் விளையாடவிருக்கிறோம். மற்றவீரர்களின் இடம் என்பது குறித்து பேசிவருகிறோம். எங்களுடைய மூத்த வீரர்கள் பலர் இல்லாதது கடினமாக இருந்தாலும், இந்த சமயத்தில் எங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று பேசியுள்ளார்.