உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நள்ளிரவில் மெசேஜ் அனுப்பியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ரிஷப் பண்ட்டும் ஒருவராக உள்ளார். தற்போது அவர், இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கியில் பிறந்த ரிஷப் பண்ட், தொழில்ரீதியாக கிரிக்கெட்டைத் தொடர்வதற்காக டெல்லிக்குச் சென்றார். தற்போதும் அவர் டெல்லியில்தான் வசித்து வருகிறார். அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து டெல்லி அணிக்காக விளையாடி வந்தாலும், உத்தரகாண்டுடனான அவரது தொடர்பு வலுவாகவே இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் அவர், டெல்லியிலிருந்து தனது இருப்பிடத்தைச் சொந்த மண்ணான உத்தரகாண்டிற்கு மாற்ற விரும்புவதாகவும், ஆனால் உத்தரகாண்டில் நிலம் வாங்க முடியவில்லை எனவும் கூறி முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்குச் செய்தி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தியில், "எனது சொந்த மக்களுக்கு அருகில் வாழ விரும்புகிறேன். இதற்காக டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு மாற நிலம் வாங்க முயன்றேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல், நிலம் வாங்குவது ஒரு கெட்ட கனவாகவே மாறிவிட்டது. அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையிலேயே நிலத்தை வாங்கத் தயாராக உள்ளேன். தயவுசெய்து நிலம் பெற உதவி செய்யுங்கள்" என்று முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய இந்தப் பதிவைப் பார்த்த முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் உடனே பதிலளித்துள்ளார்.
அவர், “அன்புள்ள ரிஷப், நீ உத்தரகாண்டின் பெருமை. உனது அற்புதமான செயல்பாடு மற்றும் சாதனைகளால், நீ நாட்டிலும் உலகிலும் தேவபூமியின் பெயரை ஒளிரச் செய்துள்ளாய். உங்கள் தாய்நாட்டின் மீதான உங்கள் அன்பும், இங்கு திரும்பிவந்து பங்களிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணமும் மிகவும் பாராட்டத்தக்கவை. நீங்கள் எழுப்பிய பிரச்னை தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொண்டு, விதிகளுக்கு இணங்க சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் உறுதி செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2025-26 நிதியாண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ. 23.84 கோடி வரி செலுத்தி, அம்மாநிலத்தின் அதிக வரி செலுத்திய நபராக பண்ட் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.