ind vs ban u19 ACC
ind vs ban u19 ACC Cricinfo
கிரிக்கெட்

யு19 ஆசிய கோப்பை: வங்கதேசத்திடம் வீழ்ந்த இந்தியா! UAEவிடம் தோற்ற பாக்.! தலைகீழான அரையிறுதி முடிவுகள்

Rishan Vengai

ஆசிய அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் முதலிய 8 அணிகள் விளையாடி வருகின்றன.

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் A பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், B பிரிவில் இருந்து வங்கதேசம் மற்றும் UAE அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிபோட்டியில் இந்திய அணி வங்கதேசத்தையும், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தோடும் மோதியது.

8 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்!

இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச அணி மிரட்டியது. 3 ரன்னுக்கு முதல் விக்கெட், 10 ரன்னுக்கு 2வது விக்கெட், 13 ரன்னுக்கு 3வது விக்கெட் என விக்கெட் வேட்டை நடத்திய வங்கதேச அணி, 61 ரன்கள் எட்டுவதற்குள்ளாகவே இந்திய அணியின் 6 விக்கெட்டுகளை கழற்றியது. அபாரமாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் மரூஃப் ரிதா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

U19 ACC Semifinal

6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முஷீர் கான் மற்றும் முருகன் அபிஷேக் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து நம்பிக்கை கொடுத்தனர். இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, இந்த கூட்டணி 250 ரன்களை எட்டிவிட்டால் இந்தியா வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் நீண்ட நேரம் இவர்களை நிலைக்கவிடாத வங்கதேச அணி மூஷீர் கானை 50 ரன்னிலும், முருகனை 62 ரன்னிலும் வெளியேற்ற அனைத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

U19 ACC Semifinal

189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அரிஃபுல் மற்றும் ஆரர் ஜோடி 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டெடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வங்கதேச 41.2 ஓவர் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத வங்கதேச அணி 8 முறை கோப்பை வென்ற இந்திய அணியை வீழ்த்தி, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தி முதல்முறையாக பைனல் சென்ற UAE!

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமீரக அணிகள் மோதியது. முதலில் விளையாடிய அமீரகம் பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. 194 ரன்கள் என்ற இலக்கை எளிதாக பாகிஸ்தான் எட்டிவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் இருந்த பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இழுத்துப்பிடித்தார் உபைத் ஷா.

U19 ACC Semifinal

கடைசிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 182 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற UAE முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஒரே பிரிவில் இருந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் வங்கதேசம் மற்றும் யுஏஇ அணிகள் கோப்பைக்காக மோதவிருக்கின்றன.