chaminda vaas icc
கிரிக்கெட்

கங்குலி, யுவராஜ் சிங்கை தொடர்ந்து.. டெல்லி அணியில் இணையும் இலங்கை பவுலிங் ஜாம்பவான்!

டெல்லி கேபிடல்ஸ் அணியில் முன்னாள் இலங்கை ஜாம்பவான் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

2027ல் முதல் பட்டத்தை நோக்கி, சௌரவ் கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோரை பயிற்சியாளர்களாக நியமிக்க திட்டமிட்டுள்ள டெல்லி, இப்போது முன்னாள் இலங்கை வேகப்பந்து ஜாம்பவான் சமிந்த வாஸையும் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனிலிருந்து விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 2020 ஐபிஎல் இறுதிப்போட்டிவரை முன்னேறிய டெல்லி அணி, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது. அதற்குபிறகு பல்வேறு பயிற்சியாளர்கள், கேப்டன்கள் தலைமையில் விளையாடினாலும் டெல்லி அணியால் ஃபைனலுக்கு தகுதிபெறவே முடியவில்லை.

இந்நிலையில் 2027 ஐபிஎல் சீசனில் முதல் கோப்பையை தூக்கவேண்டுமென இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இருவரையும் பயிற்சியாளர்களாக நியமிக்க டெல்லி கேபிடல்ஸ் திட்டமிட்டுள்ளது. உரிமையாளர்களின் சுழற்சி அடிப்படையில் ஜி.எம்.ஆர் குழுமத்திடமிருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்டுப்பாட்டில் எடுக்கும் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், தங்களுடைய விருப்பப்படி புதிய பயிற்சியாளர்களை நியமிக்க உள்ளது. அதனடிப்படையில் 2026 ஐபிஎல்லில் பயிற்சியாளர்களாக இருந்த ஹேமங் பதானி உள்ளிட்டோர் வேலையை இழக்க உள்ளனர்.

இந்தசூழலில் தான் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸை டெல்லி கேபிடல்ஸ் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாகீர் கான், அனில்கும்ப்ளே உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கங்குலி, யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் இருப்பதால் சமிந்த வாஸ்ஸின் இணைப்பு டெல்லி கேபிடல்ஸுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.