virat kohli, kl rahul pt web
கிரிக்கெட்

ரஞ்சி டிராபி தொடரில் இருந்து விலகும் கோலி மற்றும் ராகுல்.. என்ன காரணம்?

விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்றோர் காயம் காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அங்கேஷ்வர்

விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்றோர் காயம் காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ கடந்த வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில்,

  • பயிற்சிக்கு வருவது முதல் பயிற்சி முடிந்து செல்வது வரை அணி வீரர்கள் அணியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்,

  • பயணத்தின்போது விளம்பரப் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்,

  • உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கட்டாயம்

என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடு!

இதில் ஏதேனும் விதிவிலக்குகள் வேண்டுமென்றால், தலைமைப் பயிற்சியாளர் அல்லது தேர்வாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். மீறினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சி ட்ராபி தொடரின் அடுத்த சுற்றுப்போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலிக்கு சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின்போது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக கடந்த 8ஆம் தேதி ஊசி போட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் டெல்லி அணிக்காக களமிறங்கும் விராட் கோலி ராஜ்கோட்டில் நடைபெறும் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் இருந்து தான் விலகிக்கொள்வதாக பிசிசிஐ மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா அணிக்கெதிரான டெல்லி அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விராட் கோலிக்கு எந்த சுளுக்கும் ஏற்படவில்லை என்ற செய்திகளும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

மறுமுனையில், கர்நாடகா அணிக்காக விளையாடும் கே.எல். ராகுல் முழங்கை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பஞ்சாப் அணியுடனான போட்டியில் களமிறங்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இரு வீரர்களுக்கும் ரஞ்சி தொடரில் விளையாட மற்றொரு வாய்ப்பும் உள்ளது. group phaseன் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குகின்றன. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்குவதால் அந்த சுற்றிலும் இரு வீரர்களும் கலந்துகொள்ளும் சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில், இரு வீரர்களும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 23 ஆம் தேதி நடக்கும் ரஞ்சி போட்டிகளில் ரிஷப் பந்த் (டெல்லி), ஜெய்ஸ்வால் (மும்பை), கில் (பஞ்சாப்) போன்றோர் விளையாட உள்ளனர்.