ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய 30வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
கோலி ஃபார்மிற்கு திரும்பிவிட்டார் 1-0 என முன்னிலை பெற்றுவிட்டோம், இனி தொடரை இந்தியா வெல்லும் என்று நினைத்த போது விராட் கோலி அதற்குபிறகு சோபிக்கவில்லை. கோலியின் வீழ்ச்சியால் இந்திய அணி முதல் போட்டியை வென்றதற்கு பிறகு ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் 3-1 என தோல்வியை சந்தித்தது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என தோல்வி, 10 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-1 என தோல்வி என்று இந்தியா வீழ்ச்சியை சந்தித்த பிறகு, இந்திய வீரர்கள் சரியாக தயாராகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை உள்வாங்கியிருக்கும் பிசிசிஐ, இந்தியாவின் முன்னணி வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற நிர்பந்தத்தை விதித்துள்ளது.
அந்த வகையில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சுப்மன் கில் போன்ற வீரர்கள் ரஞ்சி கோப்பையில் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனாலும் கோலியின் பெயர் இதில் அடிபடவில்லை.
இந்நிலையில் விராட் கோலி ரஞ்சி கோப்பை போட்டிக்கு திரும்பவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்போர்ட்ஸ் டாக் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, ஜனவரி 30-ம் தேதி ரயில்வே அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடவிருக்கும் ரஞ்சி போட்டியில் விராட் கோலியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2012-ம் ஆண்டு கடைசியாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்த விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடவிருக்கிறார். இந்த மிகப்பெரிய முடிவை மூத்தவீரர்கள் எடுப்பது, இளம்வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணிப்பதை தடுக்கும் என பாராட்டப்படுகிறது.
ரஞ்சி கோப்பை டெல்லி அணி:
ஆயுஷ் பதோனி (கேப்டன்), சனத் சங்வான், அர்பித் ராணா, யாஷ் துல், ரிஷப் பண்ட், ஜான்டி சித்து, ஹிம்மத் சிங், நவ்தீப் சைனி, மனி கிரேவால், ஹர்ஷ் தியாகி, சித்தாந்த் சர்மா, சிவம் சர்மா, பிரணவ் ராஜ்வன்ஷி, வைபவ் கண்ட்பால், மயங்க் குஸ்சைன், , ஆயுஷ் தோசேஜா, ரௌனக் வகேலா, சுமித் மாத்தூர், ராகுல் கஹ்லோட், ஜிதேஷ் சிங்.