Ind vs Wi
Ind vs Wi Twitter
கிரிக்கெட்

அதிக ரன்கள் குவித்த திலக், சூர்யா! வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட்!

Viyan

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்திருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-3 என இழந்தது இந்தியா. முதலிரு போட்டிகளையும் தோற்ற இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை சமன் செய்தது. கடைசி போட்டியையும் வென்று கம்பேக்கை முழுமையாக்கும் என்று நினைத்திருக்க, ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்தது ஹர்திக்கின் அணி. இந்தத் தொடரில் இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சுப்மன் கில் - 5 இன்னிங்ஸ்களில் 102 ரன்கள் :

இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் கில்லுக்கு சிறப்பாக அமையவில்லை. அவர் தடுமாற்றம் டி20 தொடரிலும் தொடர்ந்தது. நான்காவது போட்டியில் அரைசதம் கடந்த அவர், மற்ற நான்கு போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. தொடர்ந்து இந்திய அணிக்கு மோசமான தொடக்கமே கொடுத்திருக்கிறார் கில். நிச்சயம் அவர் மறக்க நினைக்கும் தொடராக இது அமைந்திருக்கிறது.

Ishan Kishan - Gill

இஷன் கிஷன் - 2 இன்னிங்ஸ்களில் 33 ரன்கள்:

முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடிய இஷன், அதன்பிறகு ஜெய்ஸ்வாலிடம் தன் இடத்தை இழந்தார். அந்த இரண்டு போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்த இவரும் தடுமாறவே செய்தார். கில்லோடு இணைந்து அவரால் நல்ல தொடக்கம் கொடுக்க முடியவில்லை. ஒருநாள் போட்டிகளில் நன்றாக ஆடியிருந்தாலும் டி20 போட்டிகளில் தாக்கம் ஏற்படுத்தத் தவறுகிறார் இஷன்.

யஷஷ்வி ஜெய்ஸ்வால் - 3 இன்னிங்ஸ்களில் 90 ரன்கள்:

இஷனுக்குப் பதிலாக வந்தவர், ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார். மற்ற இரு போட்டிகளிலும் சேர்த்தே 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்ற அவரது அணுகுமுறை இந்தத் தொடரில் அவருக்குப் பலன் கொடுக்கவில்லை. இருந்தாலும் முதல் சர்வதேச டி20 தொடர் என்பதால் அதிக விமர்சனங்கள் முன்வைப்பதும் சரியாக இருக்காது.

Suryakumar

சூர்யகுமார் யாதவ் - 4 இன்னிங்ஸ்களில் 166 ரன்கள்:

ஆரம்பத்தில் பெரிய தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும், மூன்றாவது போட்டிக்குப் பின் பழைய சூர்யாவாக விஸ்வரூபம் எடுத்தார். ஐந்தாவது போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறும்போது தனி ஆளாக அரைசதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இந்தியாவின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்கை!

திலக் வர்மா - 5 இன்னிங்ஸ்களில் 173 ரன்கள் + 1 விக்கெட்:

தன் முதல் சர்வதேச தொடரிலேயே அனைவரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறார் திலக். இத்தொடரில் இந்தியாவின் சிறந்த வீரராக விளங்கியிருக்கும் அவர், எந்தவித அச்சமும் இல்லாமல் அநாயசமாக ஒவ்வொரு பௌலரையும் எதிர்கொண்டார். மிடில் ஆர்டருக்குத் தேவையான அந்த இடது கை பேட்டிங் ஆப்ஷனைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆஃப் ஸ்பின் ஆப்ஷனும் கொடுக்கிறார் அவர். கடைசி போட்டியில் 1 விக்கெட் வீழ்த்திய அவரை, முதல் நான்கு போட்டிகளில் ஹர்திக் பயன்படுத்தியிருக்கலாம்.

Tilak Varma

சஞ்சு சாம்சன் - 3 இன்னிங்ஸ்களில் 32 ரன்கள்:

மற்றுமொரு வாய்ப்பு, மற்றுமொறு ஏமாற்றம். சஞ்சு சாம்சனைப் பற்றிச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சரியாகப் பயன்படுத்துகிறாரா என்ற வாதங்களும் இருக்கின்றன. அதற்கு ஏற்றதுபோலவே தன் வாய்ப்புகளை வீணடித்துக்கொண்டே இருக்கிறார் சஞ்சு. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு ஹீரோவாகும் வாய்ப்பு பலமுறை கிடைத்தும் ஒன்றைக் கூட அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஹர்திக் பாண்டியா - 4 இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் + 4 விக்கெட்டுகள்:

கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பௌலராக... எந்த ஏரியாவிலும் இது ஹர்திக்குக்கு திருப்தி தரக்கூடிய தொடர் இல்லை. சுமார் 15 ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 தொடரை தோற்காத அணி தோற்றிருக்கிறது. இத்தொடரில் ஹர்திக்கின் பல முடிவுகள் கேள்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பௌலரை முழுமையாகப் பயன்படுத்தாமல் விட்டு விமர்சனத்துக்குள்ளானார் அவர். முன்பு இருந்த ஹர்திக் போல் இல்லாமல் மிகவும் இறுக்கமாகவே இருந்தார் அவர். பேட்டிங்கிலும் அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

Hardik Pandya

அக்‌ஷர் படேல் - 3 இன்னிங்ஸ்களில் 40 ரன்கள் + 2 விக்கெட்டுகள்:

பேட்டிங்கைப் பொறுத்தவரை அக்‌ஷரின் செயல்பாட்டைக் கொண்டாடவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. அவர் களமிறங்கும்போது இந்திய அணி தடுமாறிக்கொண்டிருக்கும். ஆனால் சப்போர்ட்டுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் தன்னால் முடிந்த அளவு அவர் முயற்சி செய்து பார்த்தார். அதேசமயம் அவரது பந்துவீச்சு மிகவும் சுமாராகவே இருந்தது. 11 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

குல்தீப் யாதவ் - 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள்:

பழைய குல்தீப் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப வந்துகொண்டிருக்கிறார். தனி ஆளாக ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவராக மீண்டும் உருவெடுத்திருக்கிறார் குல்தீப். அதிக விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், 5.75 என்ற எகானமியில் மிகவும் சிக்கனமாக விளங்கியிருக்கிறார். ஏனெனில், அவரை அட்டாக் செய்வது மிகவும் ஆபத்து என்பதை உணர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவரை மிகவும் கவனமாக எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஆனானப்பட்ட பூரண் கூட குல்தீப்பை அட்டாக் செய்யவில்லை.

Kuldeep Yadav

யுஸ்வேந்திர சஹால் - 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகள்:

சஹாலைப் பொறுத்தவரை இந்தத் தொடர் அவரை பின்னோக்கி அழைத்துச் சென்றிருக்கிறது. ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறாதவர், இந்தத் தொடரில் அசத்தினால் உலகக் கோப்பைக்கான போட்டியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இவரை மிகவும் எளிதாக டார்கெட் செய்தனர்.

ரவி பிஷ்னாய் - 1 போட்டியில் விக்கெட் இல்லை:

குல்தீப் யாதவ் காயத்தால் ஒரு போட்டியில் விளையாடாமல் போக, அந்தப் போட்டியில் மட்டும் வாய்ப்பு பெற்றார் பிஷ்னாய். ஆனால் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

Arshdeep Singh

ஆர்ஷ்தீப் சிங் - 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகள்:

ஒரு போட்டியில் சிறப்பாகப் பந்துவீசும் ஆர்ஷ்தீப், அடுத்த போட்டியில் அதைத் தொடரத் தவறுகிறார். பவர்பிளேவில் விக்கெட்டுகள் வீழ்த்தியவர், டெத் ஓவர்களில் அதிகம் ரன் வழங்கினார். தன்னுடைய பலத்தை அதிகம் பயன்படுத்தாமல், இந்தத் தொடரில் அவர் அதிக நக்கில் பால்களைப் பயன்படுத்தியது பின்னடைவாக அமைந்தது. ஒருசில முறை அது நல்ல பலன் கொடுத்தாலும், அதிகமாக ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

முகேஷ் குமார் - 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகள்

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும், இந்தத் தொடர் முகேஷுக்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது. இந்தத் தொடர் இந்தியாவுக்கு ஒரு நல்ல பௌலரையும் கொடுத்திருக்கிறது. டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர், தொடர்ந்து யார்க்கர்களாக வீசினார். அவரது யார்க்கர் துல்லியம், நிச்சயம் எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும்.

13 வீரர்கள் ஆடிய இந்தத் தொடரில், அவேஷ் கான், உம்ரன் மாலிக் இருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Mukesh Kumar

இந்திய நிர்வாகம்: வீரர்களைப் போல் நிர்வாகத்தின் செயல்பாட்டையும் விமர்சிக்கவேண்டுமெனில், இது மோசமான ஒரு தொடராகவே அமைந்திருக்கிறது. பேட்டிங் செய்யக்கூடிய ஒரு பௌலர் கூட இல்லாதது, பௌலிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யாதது போன்ற விஷயங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். நிச்சயம் டிராவிட்டின் நிர்வாகம் தங்கள் அணுகுமுறையை மாற்றவேண்டும்.