17 வருட அவமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விராட் கோலியின் வின்னிங் சிக்ஸுடன் ஆர்சிபி அணி தொடர்ந்து 2வது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 155 ரன்களுக்கு குஜராத் டைட்டன்ஸை கட்டுப்படுத்திய புவனேஷ்வர், ஹசல்வுட், ரசிக்-தர் சலாம் பவுலிங் அசத்த, 75* ரன்கள் அடித்த கோலி, வெங்கடேஷ் ஐயர் பங்களிப்பில் 156 ரன்களை எளிதில் துரத்தி பட்டத்தை கைப்பற்றினர்.
சோக்கர்ஸ் அணி, ஃபெயிலர் கேப்டன், முதல்ல ஒரு கோப்பையாவது வின் பண்ணிட்டு பேசுங்க, என 17 வருடமாக ஆர்சிபி ரசிகர்களும், விராட் கோலியின் ரசிகர்களும் சென்ற இடமெல்லாம் அவமானங்களை மட்டுமே எதிர்கொண்டனர். பட்ட காயத்திற்கெல்லாம் அருமருந்தாய் அடுத்தடுத்து 2 கோப்பைகளை வென்று மகுடம் சூடியுள்ளது ஆர்சிபி அணி. கோலி போன்ற ஜாம்பவான் கேப்டனால் கூட செய்ய முடியாததை, கோப்பை வெல்லும் கனவை 2 முறை தொடர்ச்சியாக வென்றுகொடுத்து வரலாறு படைத்துள்ளார் ரஜத் பட்டிதார்.
நடப்பு சாம்பியனாக 2026 ஐபிஎல் தொடரில் களம்கண்ட ஆர்சிபி அணி, எப்படி கடந்த ஐபிஎல்லில் சென்றதோ அதேபோலவே திரும்ப வந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் தரமாக செயல்பட்ட ஆர்சிபி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் காலடி வைத்தது.
மறுமுனையில் தொடர்ந்து 5 போட்டிகளில் வரிசையாக வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி குவாலிஃபையர் 1-ல் ஆர்சிபியிடம் தோற்றாலும் குவாலிஃபையர் 2-ல் ராஜஸ்தானை வீழ்த்தி 2வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தலா 1 கோப்பை வென்ற 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதியதால், எந்த அணி 2வது கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுதர்சன் மற்றும் கேப்டன் கில் இருவரும் அதிரடியாக தொடங்கினர்.
நடப்பு சீசனில் தலா 700 ரன்கள் அடித்திருக்கும் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இறுதிப்போட்டியில் அதே ஃபார்மை தொடர்வார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில், ஹசல்வுட் ஒரு அற்புதமான பவுன்சர் மூலம் கேப்டன் சுப்மன் கில்லை 10 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ந்து ஐபிஎல்லில் நவீன ரன் மெஷினாக மிரட்டிவரும் சாய் சுதர்சனை 12 ரன்னுக்கு வெளியேற்றிய புவனேஷ் குமார் டைட்டன்ஸ் அணியில் தலைமேல் இடியை இறக்கினார்.
2 பெரிய தலைகள் வெளியேறிவிட்டனர், இனி யார் அணியை காப்பாற்றுவார் என்ற கவலை எழுந்த நிலையில், அடுத்தடுத்து அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தி டைட்டன்ஸ் அணியை மீளவே விடாமல் பார்த்துக்கொண்டனர். பட்லர், ஹோல்டர் என அனைவரும் சொதப்ப கடைசிவரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 37 பந்தில் 50 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே அடித்தது. புவனேஷ்வர் குமார், ஹசல்வுட் மற்றும் ரசிக்-தர் சலாம் 3 பேரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
156 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த வெங்கடேஷ் ஐயர் 32 ரன்னில் வெளியேற, அடுத்துவந்த தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 2 விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்வேகத்தை குறைக்காத ஆர்சிபி பவர்பிளேவில் 70 ரன்களை அடித்து அசத்தியது. ஆனால் 9வது ஓவரை வீசிய ரசீத்-கான் ரஜத் பட்டிதார் மற்றும் க்ருணால் பாண்டியா என 2 பேரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி டைட்டன்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
ஆனால் ‘கிங்ஸ் ஆஃப் சேஸிங்’என பெயர் எடுத்த விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 75 ரன்கள் அடித்து அணியை கோப்பைக்கு அழைத்துச்சென்றார். வின்னிங் ரன்களை விராட் கோலி சிக்சராக அடித்து முடிக்க, 17வருடங்களாக கோப்பையே வெல்லாத ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 2வது கோப்பையை வென்று மகுடம் சூடியது.
தோனி, ரோகித் சர்மா போன்ற 2 ஜாம்பவான் கேப்டன்களுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை தொடர்ச்சியாக 2 முறை வென்ற 3வது கேப்டன் என்ற மாபெரும் சாதனை படைத்தார் ரஜத் பட்டிதார். இறுதிவரை நிலைத்து ஆடி வெற்றியை உறுதிசெய்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
கோலியின் வின்னிங் சிக்ஸ், ஆர்சிபிக்கு 2வது கோப்பை, இதுக்குமேல என்ன வேணும் 'IM Finished' என ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். கோப்பையே வெல்லமுடியாமல் திணறிய ஒரு அணி, அடுத்தடுத்து 2 கோப்பையை வென்று ‘இனிதான் ஆரம்பம்’ என புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. வாழ்த்துக்கள் சாம்பியன்ஸ் ஆர்சிபி!