2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி, 8 லீக் ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. க்ரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால், ஆர்சிபி 8 விக்கெட் வித்தியாசத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 2வது கோப்பையை வெல்லும் ஆர்சிபி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியது.
இந்தசூழலில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்சிபி மகளிர் அணி, நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உபி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதைத்தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக க்ரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 9 ஓவரிலேயே 100 ரன்கள் பார்ட்னர்ஷி போட்டனர். ஹாரிஸ் 75 ரன்களும், மந்தனா 54 ரன்களும் அடிக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது ஆர்சிபி அணி.
இதன்மூலம் 8 லீக் ஆட்டங்களில் 6 போட்டிகளில் வெற்றிபெற்ற ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. கடந்த 2024ஆம் ஆண்டு முதல் WPL கோப்பையை வென்ற ஆர்சிபி 2வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2வது மற்றும் 3வது இடத்திற்காக குஜராத், மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.