jadeja web
கிரிக்கெட்

”ODI போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்..” - பயிற்சியாளர் சொன்னதை பகிர்ந்த ஜடேஜா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் ஜடேஜா, 2027 உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறேன் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் ஜடேஜா, 2027 உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறேன் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.

அக்டோபர் 19-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.

இதற்கான இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் ஒருநாள் அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை.

தேர்வுக்குழுவின் இந்தமுடிவை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அனிருதா ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், சடகோபன் ரமேஷ் போன்றவர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடவேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஜடேஜா..

ODI போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது குறித்து பேசியிருக்கும் ஜடேஜா, “ஒருநாள் போட்டிகளில் நான் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது என் கையில் இல்லை. முடிவில் அணி நிர்வாகம், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கிறார்கள். அணி கட்டமைப்பு குறித்து அவர்கள் என்னிடம் பேசினார்கள், அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணத்தை அவர்கள் தெரிவித்தது நல்ல விஷயம். அதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இத்தனை வருடங்களாக நான் இந்திய அணிக்கு செய்ததை மீண்டும் செய்ய முயற்சிப்பேன். 2027 உலகக் கோப்பையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதற்கு முன்பு பல ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து நான் சிறப்பாகச் செயல்பட்டால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. உலகக் கோப்பையை வெல்வது என்பது அனைவரின் கனவு. கடந்த முறை நாங்கள் அதை மிக அருகில் சென்று தவறவிட்டோம், அடுத்த முறை அதைச் சரிசெய்வோம்” என்று ஜடேஜா பேசியுள்ளார்.