அனிருத் ஜடேஜா
அனிருத் ஜடேஜா pt web
கிரிக்கெட்

“என் மனைவியின் பென்சன் பணம் ரூ.20,000-ல்தான் வாழறேன்” - ரவீந்திர ஜடேஜாவின் தந்தை வேதனை!

Angeshwar G

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் ஜடேஜா, ஜடேஜா மீதும் அவரது மனைவியும் குஜராத்தின் ஜாம்நகர் (வடக்கு) தொகுதியின் எம்.எல்.ஏவுமான ரிபாவா மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ஜடேஜாவிற்கும் ரிபாவாவிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் திருமணம் நடந்தது.

ஜடேஜாவின் தந்தை பேசியது என்ன?

இந்நிலையில் குஜராத்தின் நாளிதழான திவ்ய பாஸ்கரிடம் பேசிய அனிருத் ஜடேஜா, “எனக்கு கிராமத்தில் நிலம் உள்ளது. எனது மனைவியின் ரூ. 20,000 ஓய்வூதியத்தில் இருந்தே எனது செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நான் தனியாக இரு அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறேன்.

ரவீந்திராவை கிரிக்கெட் வீரராக்க நாங்கள் கடினமாக உழைத்தோம். பணம் சம்பாதிப்பதற்காக 20 லிட்டர் பால்கேன்களை தோளில் சுமந்து செல்வேன். வாட்ச் மேனாக கூட வேலை செய்திருக்கிறேன். நாங்கள் எளிமையான பின்னணியில் இருந்து வந்தோம். அவருடைய சகோதரி என்னைவிட அதிகமாக அவருக்கு அதிகம் செய்துள்ளார். அவர் ரவீந்திராவை தாயாக இருந்து பார்த்துக்கொண்டார். இருப்பினும் இப்போது ரவீந்திரா, அவரது சகோதரியிடம் கூட எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை.

பேத்தியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை...

எனக்கும் ரவீந்திரா மற்றும் அவரது மனைவி ரிவாபாவிற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ள மாட்டோம். அவர்களும் எங்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள். இந்த பிரச்னை அவர்களது திருமணம் முடிந்த இரண்டு மூன்று மாதங்களிலேயே ஆரம்பித்துவிட்டது.

திருமணமான மூன்று மாதங்களில் ரவீந்திராவின் உணவகத்தின் உரிமை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. உணவகத்தின் உரிமையை தனது பெயருக்கு மாற்றச்சொல்லி அவர் (மருமகள்) கேட்டார். அவர் எங்கள் குடும்பத்தில் விரிசலை உருவாக்கிவிட்டார். அவர் எங்கள் குடும்பத்தோடு இல்லாமல் தனிக்குடும்பகாக இருக்க ஆசைப்பட்டார். நான் தவறு செய்திருக்கலாம், ரவீந்திராவின் சகோதரி தவறு செய்திருக்கலாம். குடும்பத்தில் உள்ள 50 பேரும் எப்படி தவறு செய்திருக்க முடியும்? குடும்பத்தில் உள்ள யாருடனும் அவர்களுக்கு தொடர்பு இல்லை. வெறுப்பு மட்டுமே உள்ளது. இதையெல்லாம் பேசினால் எனக்கு அழுகைதான் வருகிறது. அவன் அக்காவும் அவனை இப்போது ஒதுக்கிவிட்டார். ரக்‌ஷாபந்தனுக்கு கூட அவரை அழைக்கவில்லை.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. ஐந்து வயதாகும் என் பேத்தியின் முகத்தைக் கூட இன்னும் நான் பார்க்கவில்லை. ரவீந்திராவின் மாமியார் எல்லாவற்றையும் நிர்வாகிக்கிறார்கள், எல்லாவற்றிலும் தலையிடுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

வைரலாகும் ஜடேஜாவின் பழைய பதிவு..

இத்தகைய சூழலில் ரவீந்திர ஜடேஜாவின் பழைய சமூக ஊடக பதிவு மீண்டும் வைரலாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியிட்ட அவரது பதிவில், “யார் ஒருவர் தினமும் தன் பெற்றோரின் பாதங்களை தொடுகிறாரோ, அவர் மற்றவரது பாதத்தை தொடும் சூழலை தன் வாழ்நாளில் எதிர்கொள்வதில்லை” என தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் தந்தை பேட்டியின் பின், இந்த பதிவு மீண்டும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

“நான் பேசாதவரையில் நல்லது” - ஜடேஜா

இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் தனது தந்தையின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜடேஜா, “திவ்ய பாஸ்கருக்கு அளிக்கப்பட்டுள்ள முட்டாள்தனமான பேட்டியில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை மற்றும் முட்டாள்தனமானவை. ஒரு பக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளதால் நான் இதை மறுக்கிறேன். என் மனைவியின் புகழைக் கெடுக்கும் முயற்சிகள் உண்மையில் கண்டிக்கத்தக்கது மற்றும் பொருத்தமற்றதும்கூட. எது நல்லது என்று சொல்ல எனக்கும் நிறைய இருக்கிறது. நான் அதை பகீரங்கமாக சொல்லாதவரையில் து நல்லது” என தெரிவித்துள்ளார்.