இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகிய சில மணி நேரத்திலேயே, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
தேர்வுக் குழுத் தலைவராக, கடந்த 2023ஆம் ஆண்டு பதவியேற்ற முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர் பதவிக்காலத்தில், இந்திய அணி பல்வேறு தொடர்களையும், கோப்பையையும் வென்றது. இருப்பினும், அவரது பதவிக்காலத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து), ரவீந்திர ஜடேஜா (டி20) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (அனைத்து வடிவங்களிலிருந்தும்) ஆகியோரும் ஓய்வு பெற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகின. எனினும், முக்கியமான தொடர்களைக் கருத்தில்கொண்டு அவரைத் தொடர்ந்து பணி செய்யுமாறு பிசிசிஐ வலியுறுத்தியது. ஆனால், அவர் பணியில் தொடரப்போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தார். இதையடுத்து, பிசிசிஐ அதற்கான நபரைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ அறிவித்த தேர்வாளர் காலிப்பணியிடம் குறித்து கருத்துத் தெரிவிக்கவும், அப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன எனக் கேட்கவும் ஜடேஜா 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார். “(தேர்வு) என் கையில் இல்லை. நான் நிச்சயமாக விளையாட விரும்புகிறேன். இறுதியில், அணி நிர்வாகம், தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோருக்கு அவரவர் எண்ணங்கள் இருக்கும், மேலும் இந்தத் தொடருக்கு என்னைத் தேர்ந்தெடுக்காததற்கு அவர்களுக்கே உரிய காரணங்களும் இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் சூடான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவும் அஜித் அகர்கரும் ஒருபோதும் வெளிப்படையாக ஒருவருக்கொருவர் முரண்பட்டதில்லை என்றபோதிலும், அகர்கரின் பதவிக்காலத்தில், 2024-இல் இலங்கைக்கு எதிராகவும், 2025-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து அந்த இந்திய ஆல்-ரவுண்டர் ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.