இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தபோதும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் மகிழ்ச்சியுடன் இருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மாற்றம் செய்யாமல் அதேஅணியை அறிவித்தது.
இந்நிலையில் நேற்று பர்மிங்காமில் தொடங்கிய இரண்டாவது போட்டியில், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக 3 அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி. அதில் நட்சத்திர வீரர் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர் 3 வீரர்கள் நீக்கப்பட்டு, பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப், சாய் சுதர்சனுக்கு பதில் மற்றொரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பும்ராவின் ஓய்வும், அதற்கு மாற்றாக ஆகாஷ் தீப்பின் சலெக்சனும் ரசிகர்களை மட்டுமில்லாமல் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பும்ரா அணியில் இடம்பெறாதது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது என்று பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, யார் அணியில் இருக்க வேண்டும் கூடாது என்பது வீரர்களின் கையில் இருக்க கூடாது, அதை கேப்டனும் தலைமை பயிற்சியாளர் இருவர் மட்டுமே முடிவுசெய்ய வேண்டும் என காட்டமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “டெஸ்டில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண் டியது அவசியமானதாகும். உங்களிடம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இருக்கிறார். 7 நாட்கள் ஓய்வுக்கு பிறகும் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் வெளியில் உட்கார வைத்து இருப்பதை நம்ப கடினமாக இருக்கிறது. அவர் 2-வது டெஸ்டில் ஆடாதது ஆச்சரியம் அளிக்கிறது.
ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் வீரரிடம் இருக்கக்கூடாது. ஆடும் லெவன் அணியில் யார் இடம் பெற வேண்டும் என்பதை கேப்டன், தலைமை பயிற்சியாளர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த தருணத்தில் தொடரில் இந்த போட்டி முக்கியமானது என்பதால், மற்றவர்களைவிட பும்ரா விளையாடி இருக்க வேண்டும்” என்று கூறினார்.