ஆதித்ய அசோக் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

IND Vs NZ ODI |'என் வழி தனி வழி’ | ரஜினி பட வசன டாட்டூவுடன் களமிறங்கும் நியூசி. பவுலர்.. யார் இவர்?

தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து லெக் ஸ்பின்னரான ஆதித்யா அசோக், இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். அவருடைய வருகை, இருதரப்பிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து லெக் ஸ்பின்னரான ஆதித்யா அசோக், இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். அவருடைய வருகை, இருதரப்பிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆதித்யா அசோக், நடிகர் ரஜினிகாந்தின் ’படையப்பா’ படத்தில் வரும் பிரபல பஞ்ச் டயலாக்கான ‘என் வழி தனி வழி’ என்கிற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்களும், செய்திகளும் கடந்த காலங்களில் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில், வரவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆதித்யா அசோக் விளையாட உள்ளார். ஜனவரி 11ஆம் தேதி பரோடாவில் தொடங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் களம் காணவுள்ளார்.

ஆதித்ய அசோக்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஆதித்யா அசோக், தமிழ்நாட்டின் வேலூர் மாவடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அங்குதான் அவர் பிறந்து வளர்ந்தார். அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் இரண்டு வார சுழல் பயிற்சி முகாமில் தனது திறமைகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மத்தியில் இந்தியா வந்தபோது, அவர் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தார். படையப்பா படத்தின் வசனத்தை பச்சைக் குத்திக் கொண்டது தொடர்பாக அவர், “என் தாத்தா உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ’படையப்பா’ படம் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் இறந்த பின்பு, அவருக்கும் எனக்கும் நெருக்கமான உரையாடலை நினைவூட்ட, ’என் வழி தனி வழி’ எனப் பச்சை குத்திக் கொண்டேன். மேலும் இந்த நிகழ்வு மூலம் என் தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இது எனது தமிழ் வேர்கள், வேலூர் மற்றும் ஒரு பிரபலமான தமிழ் சின்னம் மற்றும் உலகளாவிய சின்னத்துடனும் தொடர்புடையது” எனக் கூறியிருந்தார். இந்த வசனம், நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தை வெல்வதற்கான ஆதித்யாவின் தனித்துவமான பாதையின் விளக்கமாகவும் பொருந்துகிறது.