Virat Kohli - Rahul Dravid
Virat Kohli - Rahul Dravid Twitter
கிரிக்கெட்

”கோலியின் வெற்றியின் ரகசியம் இதுதான் ; அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்” - ராகுல் டிராவிட் ஓபன் டாக்!

Rishan Vengai

2023ஆம் ஆண்டு விராட் கோலிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக மாறவிருக்கிறது. தற்போது 500 சர்வதேச போட்டிகள், அதிக சர்வதேச ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் (25548 ரன்களுடன்) 5வது வீரர் என பல மைல்கல் சாதனைகளை எட்டியிருக்கும் அவர், அடுத்த மாதம் வந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த வீரராக மாறுவார். அதுமட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற அவருக்கு, 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் மற்றொரு ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு அணி வீரர்களும் அவரை பின்பற்றவே நினைக்கிறார்கள்!

தற்போதைய இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரையில், விராட் கோலி இந்தியாவின் டி20 அணியின் ஒரு பகுதியாக இல்லாமல் போனாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பெரிய உந்து சக்தியாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் விராட் கோலி குறித்து பிசிசிஐ உடனான நேர்காணலில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட், 110 டெஸ்ட் மற்றும் 15 வருட சர்வதேச கிரிக்கெட்டை பார்த்த பிறகும் அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு இன்னும் நம்பமுடியாதபடி இருப்பதாக பாராட்டியுள்ளார்.

virat kohli

கோலி குறித்து பேசியிருக்கும் தலைமை பயிற்சியாளர் டிராவிட், “இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் அவரையே பின்பற்றுகின்றனர். அணிக்குள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல சிறுவர், சிறுமிகளுக்கு விராட் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். அவரது எண்கள் மற்றும் புள்ளிவிவரங்களே இதை பேசி வருகின்றன. தொடர்ந்து அவருடைய அபாரமான பேட்டிங், அவரின் புத்தகத்தில் புதிய சாதனைகளை எழுதிகொண்டே இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி யாரும் பார்க்காத திரைக்குப் பின்னால் அவர் எடுக்கும் முயற்சி மற்றும் உழைப்புதான் அவருடைய பெரிய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். அது தான் அவரை 500 சர்வதேச போட்டிகளுக்கு அழைத்து வந்துள்ளது” என்று டிராவிட் கூறியுள்ளார்.

நிறைய தியாகங்களை செய்துள்ளார்!

விராட்டின் 15 வருட கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய டிராவிட், “இன்னும் அவர் தன்னை மிகவும் வலிமையானவராகவே வைத்துள்ளார், மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். 12-13 வருடங்களை கடந்தும் 500 போட்டிகளில் விளையாடிய பிறகும், அவர் வெளிப்படுத்தும் எனர்ஜி மற்றும் உற்சாகம் என்பது உண்மையிலேயே பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கிறது. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய தியாகங்களைச் செய்திருக்கும் கோலி, மேலும் அதைத் தொடர்ந்து செய்யத் தயாராக இருக்கிறார். இது ஒரு பயிற்சியாளருக்கு மிகச் சிறந்த விஷயமாக இருக்கிறது. நிறைய இளம் வீரர்கள் அதைப் பார்த்து உத்வேகம் பெறுகின்றனர்.

virat kohli

நீங்கள் அணிக்காக சிலவற்றை தனியாக செய்து தான் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் உங்களை நடத்தும் விதம், கடினமான நேரங்களில் உங்களை கேரி செய்து சுமக்கும் விதம், பயிற்சியில் ஈடுபடும் விதம் மற்றும் ஃபிட்டான உடற்தகுதி என உங்களுடைய ஒரு சிஸ்டமே பல வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கிறது. இது அணிக்குள் வரும் பல வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.

இளம் வீரர்களால் பல வருடங்கள் விளையாட முடியும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்துள்ளார். அதற்கான நிறைய கடின உழைப்பு, ஒழுக்கம், அனுசரிப்புத் தன்மை என எல்லாவற்றையுமே அவர் வெளிக்காட்டியுள்ளார். இது தொடரட்டும்” என்று மேலும் டிராவிட் பாராட்டி பேசியுள்ளார்.

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்!

2008ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டிராவிட் மற்றும் கோலி இருவரும் சேர்ந்து விளையாடினர். பின்னர் ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒருநாள் போட்டியில் சகவீரர்களாக ஒன்றாக ஆடினார்கள். அதற்கு பிறகு 2011-ல் இதே போலான வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில், கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீண்ட வடிவ கிரிக்கெட்டின் சகவீரர்களாகவும் டிராவிட் மற்றும் கோலி இருவரும் களத்தை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 2012 ஜனவரியில் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில், கோலி தனது முதல் டெஸ்ட் சதத்தை விளாசிய ஆட்டம் தான், டிராவிட்டின் கடைசி ஆட்டமாக இருந்தது.

virat kohli

இந்நிலையில் இளம் வீரராக பார்த்த பிறகு தற்போதைய விராட்டின் பயணத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக டிராவிட் கூறியுள்ளார். “நான் விளையாடும் போது, ​கோலி ஒரு இளம் வீரராக இருந்தார். பின்னர் நான் அணியில் விளையாடவில்லை, ஆனால் அதற்கு பிறகு அவர் செய்ததையும் தொடர்ந்து சாதித்ததையும் மிகவும் மகிழ்ந்து வெளியில் இருந்து பார்த்தேன். பயிற்சியாளராக மாறிய இந்த 18 மாதங்களில் அவரை பற்றி தனிப்பட்ட முறையில் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அது வேடிக்கையாக இருந்தது. நான் அதை மிகவும் ரசித்தேன், மேலும் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று டிராவிட் கூறியுள்ளார்.