rahul dravid PT
கிரிக்கெட்

டிராவிட் ஏன் ‘இந்தியாவின் சுவர்’ தெரியுமா? 3 தரமான சம்பவங்கள்! #HappyBirthdayDravid

அடுத்த சச்சின், அடுத்த கங்குலி என்றெல்லாம் அடுத்தடுத்த தலைமுறை வீரர்களுக்கு உவமை கொடுக்கப்படும் வரலாறு உண்டு. ஆனால் ராகுல் டிராவிட்டுக்கான மாற்றுவீரர் என ஒருவர்கூட கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். THE WALL என்ற பெயர் உருவான வரலாற்றை பார்க்கலாம்..

Rishan Vengai

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், ஜனவரி 11, 2025 (இன்று) தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

டெஸ்டில் 13,288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889 ரன்கள் என மொத்தமாக 24,208 ரன்களைக் குவித்திருக்கும் டிராவிட் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

ராகுல் டிராவிட்

THE WALL” என உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். அந்தளவு அவர் டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் காட்டிய வித்தைகள் ஏராளம். உலக கிரிக்கெட்டின் ஜாம்பாவான் பந்துவீச்சாளர்களே பார்த்து அச்சப்பட்ட ஒரு வீரராக விளங்கிய டிராவிட், தன்னுடைய அசாத்தியமான தடுப்பு ஆட்டத்தால் “சுவர்” என்ற அடைமொழியை பெற்றுள்ளார்.

இங்கு “இந்தியாவின் சுவர்” என்ற அடைமொழியை பெற்றதற்கான மூன்று முக்கியமான காரணங்களை அறிந்து கொள்ளலாம்..

டெஸ்ட்டில் 30,000 பந்துகளை எதிர்கொண்ட ஒரே வீரர்..

"THE WALL" என வைக்கப்பட்டிருக்கும் பட்டப்பெயருக்கு சால பொருத்தமானவர் ராகுல் டிராவிட். “இந்திய கிரிக்கெட்டின் சுவர்” என்ற பெயரெல்லாம் எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. அந்த பெயரை சுமப்பதற்கு அவர் பல ஜாம்பவான் பந்துவீச்சாளர்களின் உடல்வலியோடு வயிற்றெரிச்சலையும் சேர்த்து வாங்க வேண்டியிருந்தது.

ஆம் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஒரு பவுலரை பெரிய ஃபுட் ஒர்க் இல்லாமல் நின்ற இடத்திலேயே பந்தை தடுத்து நிறுத்திவிடுவார் ராகுல் டிராவிட். சுற்றியிருக்கும் ஃபீல்டர்களும் நகரவேண்டியதில்லை, பேட்ஸ்மேனும் நகரவேண்டியதில்லை, விக்கெட் கீப்பரும் நகரவேண்டியதில்லை, 150 கிமீ வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் வீசிவிட்டு, பவுலர் ஒருவர் மட்டும் ஓடி ஓடிக்கொண்டிருந்தால் கடுப்பாகும் இல்லையா!. அப்படி வேகப்பந்துவீச்சாளர்களின் ஆற்றலை பறித்துவிட்டு சோர்ந்திருக்கும் போது பவுண்டரிகளை விரட்டுவதில் வல்லவர்தான் “WALL" என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்.

பெயருக்கு ஏற்றார் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்திருக்கும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31,258 பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தான். அதாவது கிட்டத்தட்ட 5210 ஓவர்களை அவர் ஒருவர் மட்டும் எதிர்கொண்டுள்ளார். அவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளுக்கு அருகில் கூட வரவில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (29,437 பந்துகள்), ஜாக் காலிஸ் (28,903 பந்துகள்), ஷிவ்நாராயண் சந்தர்பால் (27,395 பந்துகள்), ஆலன் பார்டர் (27,002 பந்துகள்) முதலிய வீரர்கள் உள்ளனர்.

கிரீஸில் அதிக நேரம் பேட்டிங் செய்த ஒரே வீரர்!

ராகுல் டிராவிட் களத்திற்கு வந்துவிட்டால் “வாங்க போயிட்டு சாப்டுட்டு டீ குடிச்சிட்டு பொறுமையாக வரலாம்” எனுமளவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு பொறுமையாகவும் நிதானத்துடனும் வேறுவேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். அந்தளவு டிராவிட் அவுட்டாகவும் மாட்டார், மற்றமுனையில் இருக்கும் வீரரை அவுட்டாக விடவும் மாட்டார், நிலைத்து நின்று ஆடக்கூடியவர் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.

ஒருமுறை அவரிடம் எப்படி உங்களால் அதிக நேரம் களத்தில் இருக்க முடிந்தது என ஒரு ஜூனியர் வீரர் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாம் ஆரம்பத்தில் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் போது எப்போது நமக்கு பேட்டிங் வரும் என காத்துக்கொண்டிருப்போம். அப்போது உடனே நாம் அவுட்டாகிவிட்டால் இன்னும் சிறிது நேரம் நின்று விளையாடியிருக்கலாமே என தோன்றும். மேலும் சிலரிடம் எனக்கு கூடுதலாக பந்துகளை வீசுங்களேன் என கேட்டுக்கேட்டு பேட்டிங் செய்துகொண்டிருப்போம். நமக்கு அப்போது இருந்த ஆர்வம் ஏன் இப்போது இருப்பதில்லை” என ஜூனியர் வீரரிடம் பதில் கேள்வி எழுப்பியுள்ளார் டிராவிட். இதன்மூலம் அவர் களத்தில் இருப்பதை எவ்வளவு விரும்பியுள்ளார் என்பது எல்லோருக்கும் புரியும்.

பேட்டிங் செய்வதை தியானம் செய்வது போல் விளையாடிய ராகுல் டிராவிட்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நேரம் பேட்டிங் செய்த ஒரே வீரர். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நிமிடங்கள் களத்தில் செலவழித்ததற்கான உலக சாதனையை டிராவிட் தன்வசம் வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. டிராவிட் மொத்தமாக 44,152 நிமிடங்கள் களத்தில் பேட்டிங் செய்தார். இது சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம்.

டக் அவுட் ஆகாமல் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடியவர்!

உலக கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து ஃபார்மேட்டிலும் டக் அவுட் ஆகாமல் அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே.

2000-2004 காலகட்டங்களில் 173 போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகமல் இந்த சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் 136 இன்னிங்ஸ்களுடன் சச்சின் டெண்டுலரும், 135 இன்னிங்ஸ்களுடன் அலெக் ஸ்டீவர்ட்டும் இருக்கின்றனர்.

ராகுல் டிராவிட்டின் இந்த 3 சாதனைகளே இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்று அழைக்கப்பட போதுமான சான்றுகளாக அமையும். இதுமட்டுமில்லாமல் டிராவிட் உடைக்கவே முடியாத 6 உலக சாதனைகளையும் தனக்கு சொந்தமாக வைத்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆல்டைம் கிரேட்டஸ்ட் ராகுல் டிராவிட்!