rachin ravindra pt
கிரிக்கெட்

ஐசிசி ODI தொடர்களில் குறைவான இன்னிங்ஸில் 5 சதங்கள்.. உலக சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா!

2024 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்து அசத்தினார் ரச்சின் ரவீந்திரா.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.

ind vs aus

துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

உலக சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. நல்ல பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வில் யங் 21 ரன்னில் வெளியேற, கேன் வில்லியம்சன் உடன் கைக்கோர்த்த ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 5வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இந்த 5 ஒருநாள் சதங்களும் ஐசிசி தொடர்களில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

rachin ravindra

ஐசிசி தொடர்களில் வெறும் 13 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியிருக்கும் ரச்சின் ரவீந்திரா, அதில் 5 சதங்களை விளாசி உலக சாதனை படைத்துள்ளார். இவ்வளவு குறைவான இன்னிங்ஸ்களில் 5 ஐசிசி போட்டி சதங்களை அடித்த வீரர் யாரும் இல்லை.

15 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்திருந்த ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து சம்பவம் செய்துள்ளார் ரச்சின் ரவீந்திரா.

குறைவான இன்னிங்ஸில் அதிக ஐசிசி ODI சதங்கள்:

* ரச்சின் ரவீந்திரா - 5 சதங்கள் - 13 இன்னிங்ஸ்கள்

* ஷிகர் தவான் - 6 சதங்கள் - 20 இன்னிங்ஸ்கள்

* சவுரவ் கங்குலி - 7 சதங்கள் - 34 இன்னிங்ஸ்கள்