ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா Twitter
கிரிக்கெட்

‘சச்சின் + ராகுல் டிராவிட்’ பெயர்கள் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா! யார் இந்த நியூசிலாந்து வீரர்?

Rishan Vengai

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கரங்களால் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இங்கிலாந்து அணியை திணறடித்த நியூசிலாந்து அணி, 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிக்கு பழித்தீர்த்தது.

நியூசிலாந்து அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய 23 வயது ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பவுலிங்கில் 1 விக்கெட்டையும், பேட்டிங்கில் 123 ரன்களையும் குவித்த ரச்சின் ரவீந்திராவுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் உள்ளது.

(RA)HUL DRAVID + SA(CHIN) = RACHIN

அது என்ன ரச்சின் ரவீந்திரா? ஏதோ இந்திய பெயர் மாதிரி இருக்குனு உங்களுக்கும் தோணுதா? அது வேற ஒன்னும் இல்லங்க. அவருடைய பெயரே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் டிராவிட்டின் இரண்டு பெயர்களையும் சேர்த்து வைக்கப்பட்டதுதான். நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனில் இந்திய தம்பதிக்கு பிறந்தவர் இந்த ரச்சின் ரவீந்திரா.

இந்தியாவில் பெங்களூரில் பிறந்த இவருடைய தந்தை ரவீந்திர கிருஷ்ணமூர்த்தி, சச்சின் மற்றும் டிராவிட் இருவரின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். தென்னிந்தியாவில் கல்லூரி அளவில் கிரிக்கெட் விளையாடிய ரவீந்திர கிருஷ்ணமூர்த்தி, ரச்சின் பிறந்த போது சச்சின் பெயரில் இருந்து “CHIN"ஐயும், ராகுல் டிராவிட் பெயரில் இருந்து “RA"வையும் எடுத்து ”RACHIN" என பெயர் வைத்துள்ளார். தெற்கு பெங்களூரில் உள்ள ஜெயநகர் பகுதியில்தான் ரச்சினின் குடும்பம் பல தலைமுறைகளாக வசித்து வந்துள்ளனர். ரச்சின் ரவீந்திராவின் தாத்தா டாக்டர். டி.ஏ.பாலகிருஷ்ண அடிகா பெங்களூரில் உள்ள விஜயா கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக இருந்துள்ளார்.

இரண்டு இந்திய ஜாம்பவான்களின் பெயரை வைத்தது பற்றி கூறியிருக்கும் ரச்சின் ரவீந்திரா, “டிராவிட் மற்றும் சச்சின் இரண்டு ஜாம்பவான்களின் பெயரைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்” என கூறியுள்ளார். பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கிவரும் இந்த 23 வயதுவீரர் நியூசிலாந்து கிரிக்கெட்டில் நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பார்!