சச்சின் - கவாஸ்கர் - புஜாரா
சச்சின் - கவாஸ்கர் - புஜாரா web
கிரிக்கெட்

முதல்தர கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் குவிப்பு! கவாஸ்கர், சச்சின் வரிசையில் இணைந்த புஜாரா!

Rishan Vengai

2024 ரஞ்சிக்கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிவரும் சட்டீஸ்வர் புஜாரா, முதல்தர கிரிக்கெட்டில் 20000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவேண்டுமென்றால், விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கினார்.

முதலிரண்டு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு சமன் என வெற்றியே பார்க்காத சவுராஷ்டிரா அணி, 3வது போட்டியில் விதர்பா அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் விளையாடிய சவுராஷ்டிரா அணி ஹர்விக் தேசாயின் 68 ரன்கள் மற்றும் புஜாராவின் 43 ரன்கள் உதவியால் முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி, சவுராஷ்டிராவின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

pujara

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய சவுராஷ்டிரா அணி புஜாராவின் 66 ரன்கள் உதவியால் 244 ரன்கள் சேர்த்தது. முடிவில் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய விதர்பா அணி 134 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களை அடித்தபோது சட்டீஸ்வர் புஜாரா முதல்தர கிரிக்கெட்டில் 20000 ரன்களை கடந்து ஜாம்பவான்கள் வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

முதல்தர கிரிக்கெட்டில் 20000 ரன்கள் குவித்த 4வது வீரர்!

2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவிற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல் ஓரங்கட்டி வருகிறது இந்திய அணி. தற்போது அவருடைய இடத்தில் சுப்மன் கில் விளையாடிவருகிறார். ஆனால் கில் தொடர்ந்து அவருடைய இடத்தில் பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், புஜாரா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார்.

Pujara

2024 ரஞ்சிக்கோப்பையின் முதல் போட்டியில் 243 ரன்களை குவித்து சாதனை படைத்த புஜாரா, அடுத்த 2 போட்டிகளில் 49, 43 மற்றும் 43, 66 என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில்தான் முதல்தர கிரிக்கெட்டில் 20000 ரன்களை குவித்திருக்கும் புஜாரா, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் முதலிய ஜாம்பவான் வீரர்களின் வரிசையில் 4வது வீரராக சாதனை படைத்துள்ளார்.

sachin - rahul dravid

முதல்தர கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:

1. சுனில் கவாஸ்கர் - 348 போட்டிகள் - 25,834 ரன்கள் - 51.46 சராசரி

2. சச்சின் டெண்டுல்கர் - 310 போட்டிகள் - 25,396 ரன்கள் - 57.84 சராசரி

3. ராகுல் டிராவிட் - 298 போட்டிகள் - 23,794 ரன்கள் - 55.33 சராசரி

4. சட்டீஸ்வர் புஜாரா - 260 போட்டிகள் - 20,013 ரன்கள் - 51.96 சராசரி