181 ரன்னில் ப்ரித்வி ஷா அவுட் ஆன நிலையில், மைதானத்தில் பந்துவீச்சாளர் முஷீர் கானை அவர் அடிக்கப் பாய்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025-26 ரஞ்சி டிராபி சீசனுக்கு முன்பு புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா ஆகிய அணிகள் மோதின. இதில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய ப்ரித்வி ஷா எதிர்பாராதவிதமாக 181 ரன்னில் அவுட்டானார். இந்த நிலையில், சர்பராஸ் கானின் சகோதரர் முஷீர் கானை அவர் அடிக்கப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முஷீர் கான் வீசிய ஃபுல்லர் பந்துவீச்சை எதிர்த்து ப்ரித்வி ஷா ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றபோது, டீப் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவர் அவுட்டானதைத் தொடர்ந்து ப்ரித்வி ஷாவை நோக்கி, முஷீர் கான் கையால் சைகை காட்டியதாகவும், ’நன்றி’ எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர், முஷீர் கானை தன் மட்டையால் அடிக்கப் பாய்ந்தார். அதற்கு முன்பு அவரது ஜெர்சியை ப்ரித்வி ஷா பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, முஷீர் கானை அவரது அணி வீரர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர், ப்ரித்வி ஷாவைச் சமாதானப்படுத்திய நடுவர், அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார். எனினும், அவர் முஷீர் கானைத் திட்டியபடியே வெளியேறினார். இந்த விவகாரம் தொடர்பாக, மும்பை மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கங்கள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன. இதில், ஏதேனும் தவறு நடந்ததாக சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது இரு வீரர்களில் ஒருவர் எல்லை மீறியதாக கண்டறியப்பட்டாலோ ஷா மற்றும் முஷீர் சிக்கலில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க செயலாளர் அபய் ஹடா, ”எங்கள் தேர்வுக் குழு கூட்டத்தின்போது இந்த சம்பவம் குறித்த அறிக்கையைப் பெறுவோம், மேலும் எங்கள் ஆலோசகரான முன்னாள் இந்திய கேப்டன் திலீப் வெங்சர்க்கார் அவர்களிடம் பேசுவார்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் கமலேஷ் பிசால், ”ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இரு வீரர்களிடமும் பேசுவோம். வீரர்களிடையே ஒழுக்கம் மிக முக்கியமான அம்சமாகும்” எனத் தெரிவித்தார்.