பாகிஸ்தானில் பாதுகாப்பு கவலை காரணமாக, இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி அளவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் நடந்த முதல் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி, இஸ்லாமாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலால் பாதுகாப்பு கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் அரசு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கி, வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை ஆடவர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகளும் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறுகின்றன..
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கடந்த செவ்வாய்கிழமை விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 299 ரன்கள் அடித்த நிலையில், வெற்றிக்காக போராடிய இலங்கை அணி 293 ரன்கள் அடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..
இந்நிலையில் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டிக்கு அருகே உள்ள இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில், இலங்கை வீரர்கள் பாதுகாப்பு கவலை தெரிவித்து நாடு திரும்ப இலங்கை வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்..
2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை யோசித்து இலங்கை வீரர்கள் 8 பேர் நாடுதிரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில், இலங்கை வாரியம் பாதுகாப்பை உறுதிசெய்ய பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும், அங்கேயே இருந்து தொடரை முடித்துவிட்டு வருமாறும் தெரிவித்தது..
இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியிருக்கும் 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி அளவிற்கான பாதுகாப்பை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. ஹோட்டலில் இருந்து இலங்கை அணியின் பேருந்து மைதானத்திற்கு புறப்பட்ட நிலையில், அதற்கு பாகிஸ்தான் அரசின் பல அடுக்கு பாதுகாப்பு வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது..