Philip Salt
Philip Salt Cricinfo
கிரிக்கெட்

தொடர்ச்சியாக 2 டி20 சதங்கள் அடித்து சாதனை! 267 ரன்கள் குவித்த ENG! IPL ஏலத்தில் விலை போகாத சால்ட்!

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வெற்றிப்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 25 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் விட்ட இங்கிலாந்து அணி டி20 தொடரில் பதிலுக்கு பதிலென அடிகொடுத்துவருகிறது.

முதலிரண்டு டி20 போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 2-0 என பின்தங்கியது. இந்நிலையில் தான் இங்கிலாந்து அணியின் தொடக்கவீரர் பிலிப் ஷால்ட்டின் அபாரமான ஆட்டத்தால், 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் இங்கிலாந்து 2-2 என தொடரை சமன்செய்துள்ளது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதமடித்த பிலிப் சால்ட் மிரட்டிவிட்டார். இங்கிலாந்து அணியும் பெரிய ரெக்கார்டை பதிவுசெய்துள்ளது.

267 ரன்கள்! 119 ரன்கள்! 3 சாதனைகளை படைத்த இங்கிலாந்து அணி!

2-1 என டி20 தொடர் இருந்த நிலையில், 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் இறங்கியதிலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிடில் ஆர்டரில் சொதப்பி வந்த பட்லர், தொடக்க வீரராக தன்னுடைய பழைய ஃபார்மிற்கு திரும்பிவருகிறார். முதலில் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்ட பட்லர் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து அரைசதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கே 117 ரன்கள் சேர்ந்த இந்த ஜோடி, ஜோஸ் பட்லர் 53 ரன்னுக்கு வெளியேற முதல் விக்கெட்டை இழந்தது.

Jos Buttler

பட்லர் சென்றாலும் அவர் விட்ட இடத்திலிருந்து அடுத்தடுத்த வந்த வீரர்கள் வானவேடிக்கை காட்டினர். 21 பந்துகளை சந்தித்த லிவிங்ஸ்டன் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு அரைசதத்தை பதிவுசெய்து ஒருபுறம் மிரட்ட, மறுமுனையில் ருத்ரதாண்டவமே ஆடிய பிலிப் சால்ட், 57 பந்துகளில் 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என வெஸ்ட் இண்டீஸ் அணியை எழவே விடாமல் அடிக்குமேல் அடிகொடுத்தார். பிலிப் சால்ட் 119 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 267 ரன்களை குவித்தது. 3வது டி20 போட்டியில் சால்ட் சதமடித்திருந்த நிலையில், 4வது டி20 போட்டியிலும் சதமடித்து அசத்தினார்.

Philip Salt

268 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 51 ரன்கள் அடித்தார். 5போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-2 என சமன்செய்துள்ளது இங்கிலாந்து அணி. தொடரை உறுதிசெய்யும் 5வது டி20 போட்டி 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இங்கிலாந்து படைத்த 3 அரிதான சாதனைகள்!

267 ரன்கள்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து பதிவுசெய்த அதிகப்பட்ச டோட்டல் இதுவாகும்.

119 ரன்கள் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பதிவுசெய்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

தொடர்ச்சியாக 2 டி20 சதங்கள்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக 2 டி20 சதங்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். சால்ட் ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு போகாதது குறிப்பிடத்தக்கது.