dhoni, matheesha pathirana
dhoni, matheesha pathirana file image
கிரிக்கெட்

விலைக்கு வாங்க முயன்ற MI? ”பணத்தால் விஸ்வாசத்தை வாங்க முடியாது” என பதிவிட்ட பதிரானா!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் ஒரு வாரத்தில் துபாயில் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே ஒவ்வொரு அணிகளும் வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. யாரும் எதிர்ப்பார்க்காத வீரர்கள் மாற்றங்களினால் எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்ற பரபரப்பான சூழல் இருந்துவருகிறது. இந்நிலையில் தான் சிஎஸ்கே அணியின் இளம் வீரரான மதீஷா பதிரானாவை வேறு ஐபிஎல் அணி விலைக்கு வாங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

பதிரானா

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை பதிரானாவுக்கு சரியாக செல்லாததால், அவரை எளிதாக விலைக்கு வாங்கிவிடலாம் என பல அணிகள் கொக்கி போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பதிரானாவை தக்கவைக்கும் பட்டியலில் வைத்த சிஎஸ்கே அணி பதிரானா மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இதுபோன்ற சூழலில் ஒரு அணி பதிரானாவை அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதாகவும், அது மும்பை அணியாகத்தான் இருக்கும் என்றும் சமூகவலைதளங்களில் பேசப்பட்டன. காரணம் அந்த அணியின் புதிய தலைமை பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அந்த அணி அதிகவிலைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை விலைக்கு வாங்கியது.

பதிரானா

இதுபோன்ற ஒரு சூழலில் தான் பதிரானா தற்போது பதிவிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய அந்த பதிவு ”யாருக்கோ மறைமுக பதிலாக இருக்கிறது என்றும், விலைக்கு வாங்க முயற்சிக்கும் அணிக்கு சரியான பதிலடி என்றும்” ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

”விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது” - பதிரானா இன்ஸ்டா பதிவு

தன்னுடைய புதிய இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கும் பதிரானா, ”விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது” என்ற டேக் லைனையும் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் இவர் மும்பை அணிக்கு தான் இதை பதிவிட்டுள்ளார் என்றும் ரசிகர்களால் கூறப்படுகிறது.

Pathirana Insta Story

சென்னை மக்கள் மீது அன்பையும், விஸ்வாசத்தையும் வைத்திருக்கும் பதிரானா மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றையும் பதிவிட்டிருந்தார்.