Pat Cummins takes 6 wickets in WTC Final x
கிரிக்கெட்

6 விக்கெட்டுகளை அள்ளிய பாட் கம்மின்ஸ்.. 138-க்கு சுருண்டது தென்னாப்ரிக்கா! வரலாற்று சம்பவம்!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா அணி.

Rishan Vengai

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடினமாக சண்டையிட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரின் அரைசதத்தின் உதவியால் 212 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

aus vs sa

அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸின் மிரட்டலான பந்துவீச்சால் 138 ரன்களுக்கே சுருண்டு தத்தளித்து வருகிறது.

138 ரன்னுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா..

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில், தொடக்க வீரர்களான மார்க்ரம் மற்றும் ரிக்கல்டன் இருவரையும் வெளியேற்றி சிறந்த தொடக்கத்தை கொடுத்தார் மிட்செல் ஸ்டார்க். அடுத்துவந்த முல்டரை கம்மின்ஸும், ஸ்டப்ஸை ஹசல்வுட்டும் வெளியேற்ற 30 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாப்பிரிக்கா.

அதற்குபிறகு கைக்கோர்த்த கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டேவிட் பெடிங்காம் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் பவுமா சிறப்பாக செயல்பட, அவரை 36 ரன்னில் வெளியேற்றிய பாட் கம்மின்ஸ் மிரட்டிவிட்டார்.

pat cummins

பவுமா வெளியேறிய பிறகு ஒரே நம்பிக்கையாக பெடிங்காம் இருந்த நிலையில், அவரையும் அவுட்டாக்கிய கம்மின்ஸ் அடுத்துவந்த வீரர்களை எல்லாம் வந்தவேகத்தில் பெவிலியன் அனுப்பினார். 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்மின்ஸ் மிரட்டிவிட, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை கடந்தார்.

138 ரன்களில் தென்னாப்பிரிக்கா ஆல்அவுட்டாக, 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது. மீண்டும் அற்புதமாக பந்துவீசி வரும் ரபாடா ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்த 32/2 என ஆஸ்திரேலியா பேட்டிங் செய்துவருகிறது.