இந்திய கிரிக்கெட் அணி web
கிரிக்கெட்

இந்தியாவிற்கு சாதகமாக அமையும் தானே.. அது எப்படி நியாயம் ஆகும்? – பாட் கம்மின்ஸ் எழுப்பும் கேள்வி

பாதுகாப்பு கவலை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாத இந்திய அணி, அவர்களின் போட்டியை மட்டும் துபாயில் உள்ள ஒரே ஸ்டேடியத்தில் மட்டுமே விளையாடிவருகிறது.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைப்ரிட் மாடலில் நடைபெற்றுவரும் போட்டியில், இதுவரை 6 லீக் ஆட்டங்கள் முடிவை பெற்றுள்ளன.

6 போட்டிகளின் முடிவில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

நியூசிலாந்து - இந்தியா

இந்த சூழலில் இந்தியாவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் நிலையில், இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு வெளிப்படையாக நன்மையான விசயமாக மாறியிருப்பதாக ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சாதகமாக அமையும்..

பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. மற்ற அணிகள் மூன்றும் பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் சென்று வெவ்வேறு ஆடுகளங்களில், சவால்களை எதிர்கொண்டு விளையாடுகின்றன.

இந்த சூழலில் இரண்டு லீக் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, வலுவான ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது. சுப்மன் கில், விராட் கோலி இருவரும் சதங்களை விளாசி சிறந்த ஃபார்மிற்கு திரும்பியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி

இந்நிலையில் இந்தியா ஒரே மைதானத்தில் நாக் அவுட் போட்டிகளிலும் விளையாடும் நிலையில், அது முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாமல் ஓய்வில் இருந்துவரும் பேட் கம்மின்ஸ், சமீபத்திய உரையாடலில் பேசும்போது “சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய அணி தொடர்ந்து ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது. அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அத்துடன், அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்" என்று கூறியுள்ளார்.

பேட் கம்மின்ஸின் இந்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.