அசாம் கான்
அசாம் கான் ட்விட்டர்
கிரிக்கெட்

எச்சரித்த நடுவர்! எதிர்ப்பை மீறி பாலஸ்தீன கொடியுடன் பேட்டை பயன்படுத்திய பாக். வீரருக்கு அபராதம்!

Prakash J

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாகப் போர் நடைபெற்ற நிலையில், தற்போது, இருதரப்பு நான்கு நாள் சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டிருந்தன. இதையடுத்து, இந்த நாட்களில் இருதரப்பிலிருந்தும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், இருதரப்பிலான சண்டை நிறுத்த ஒப்பந்த நாள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. முன்னதாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஹமாஸுக்கு அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் கராச்சியில் தேசிய டி20 தொடர் ஒன்றில், லாகூர் ப்ளூஸ் மற்றும் கராச்சி ஒயிட்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று (நவ. 26) போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கராச்சி அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அசம் கான், பாலஸ்தீனத்தின் கொடியை அசாம் கான் தனது பேட்டில் ஒட்டியிருந்தார். இதையடுத்து, ஆடை மற்றும் உபகரண விதிகளை மீறியதற்காக அசம் கானுக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இதனால் தான் ஹர்திக் பாண்டியா MI-க்கு சென்றார்! காரணத்தை போட்டுடைத்த குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர்!

முன்னதாக, பாலஸ்தீனக் கொடியை பேட்டில் வைக்க வேண்டாம் என நடுவர் எச்சரித்துள்ளார். அதற்கு அசாம் கான், ”என்னுடைய அனைத்து மட்டைகளிலும் ஒரே மாதிரியான ஸ்டிக்கர்களே இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார். நடுவர் அவரை எச்சரித்தும், பாலஸ்தீனக் கொடியின் ஸ்டிக்கரை அகற்ற அசாம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவருக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து இதுபோன்ற கொடி ஒட்டிய ஸ்டிக்கரைக் கொண்டு அவர் விளையாடினால், சஸ்பெண்ட் செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஐசிசி நடத்தை விதிகளை மீறும் செயலாகும். ஆடை மற்றும் உபகரணங்களுக்கான ஐசிசி விதிகள் அரசியல், மத அல்லது இன நடவடிக்கைகள் அல்லது காரணங்களுடன் தொடர்புடைய செய்திகளைக் காட்ட வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகிறது.

பாகிஸ்தான் ஊடகங்களின்படி, அவர் முந்தைய போட்டிகளின்போதும் இதேபோன்ற கொடியை தனது பேட்டில் பயன்படுத்தியதாகவும், அப்போது அதுகுறித்து யாரும் எச்சரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”என்உயிருக்கு ஆபத்துனா அதிபர்தான் காரணம்”-இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிநீக்கமும் பின்னணியும்