பாகிஸ்தான் web
கிரிக்கெட்

29 வருடத்திற்கு பின் இடம்பெற்ற ஐசிசி தொடர்.. முதல் அணியாக வெளியேறும் பாகிஸ்தான்? வாய்ப்பு என்ன?

1996 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தானில் 29 வருடங்களுக்கு பிறகு நடத்தப்பட்டுவருகிறது 2025 சாம்பியன்ஸ் டிராபி.

Rishan Vengai

சாம்பியன்ஸ் டிராபி தொடரானது, 2017-க்கு பின் 8 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளது. கடைசியாக லண்டனில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான் அணி. அதற்குபிறகு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை மட்டுமே நடந்துவந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் திரும்பியுள்ளது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இந்நிலையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. கடைசியாக 1996 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹோஸ்ட் நாடாக இருந்த பாகிஸ்தான், கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு பிறகு தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது.

இந்தியா vs பாகிஸ்தான்

இந்த சூழலில் முதலிரண்டு லீக் போட்டிகளிலும் தோற்றுள்ள பாகிஸ்தான் அணி, 29 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நடக்கும் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறும் துரதிருஷ்டவசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் அணியாக வெளியேறுகிறதா பாகிஸ்தான்?

மினி உலகக்கோப்பை எனக் கூறப்படும் சாம்பியன்ஸ் கோப்பையானது, மற்ற உலகக்கோப்பை தொடர்களை போல நீண்ட லீக் போட்டிகளை கொண்ட தொடர் கிடையாது. இதில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் அணிகள் மட்டுமே பங்குபெறும்.

நான்கு, நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடப்படும் தொடரில், ஒரு அணி மற்ற 3 அணிகளை எதிர்கொண்டு விளையாடும். இது கிட்டத்தட்ட நாக்அவுட் போட்டிகளை போல கணக்கில் கொள்ளப்படும், ஏனென்றால் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட எந்த உலகத்தரம் வாய்ந்த அணியாக இருந்தாலும் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

பாகிஸ்தான்

இந்த சூழலில் தான் முதலிரண்டு லீக் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தியாவிற்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது.

இரண்டு தோல்விக்கு பிறகு -1 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கும் பாகிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இன்று நடைபெறும் நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவ வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்தியாவுடனும் நியூசிலாந்து தோற்க வேண்டும்.

ஒருவேளை இதுநடந்துவிட்டால் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி மோதலில், அவ்வணியை மிகப்பெரிய ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற முடியும்.

மாறாக இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் தோல்வியை தழுவினால், பாகிஸ்தான் முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறும். இது 29 வருடங்களுக்கு பிறகு ஐசிசி தொடருக்காக காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். பாகிஸ்தான் அணியில் நிறைய குறைகள் இருப்பதால், அந்த அணி முழுமையாக கலைக்கப்பட்டு திறமையான வீரர்கள் இடம்பெற்றால் மட்டுமே வீழ்ச்சியிலிருந்து முன்னேறி அடுத்த உலகக்கோப்பை தொடருக்கு கம்பேக் கொடுக்க முடியும்..