பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை, அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷெரீபும் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். தற்போது, டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை ஐசிசியிடம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை, அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷெரீபும் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். அதேநேரத்தில், இதுதொடர்பாக பாகிஸ்தான் கடிதம் அளித்து, 'ஃபோர்ஸ் மஜூர்' விதியைப் பயன்படுத்துமாறு ஐசிசியிடம் வலியுறுத்தி இருந்தது. ஆனால், அதுதொடர்பாக ஐசிசி விளக்கம் கேட்டிருந்தது. இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தது.
இதற்கிடையே, ஐசிசியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நேற்று லாகூரில் பேச்சுவார்த்தை நடத்தின. 5 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவுடன் விளையாடுவது குறித்து அரசுடன் கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், அதற்கு இன்னும் 24 மணி நேரம் அவகாசம் தேவை என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை ஐசிசியிடம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப் போட்டிகளில் இந்தியாவைப் புறக்கணிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமானால், ஐசிசியால் ஈட்டப்படும் வருவாயில் அதிக பங்கை பாகிஸ்தானுக்கும் அதிகரித்து வழங்க வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு போட்டிகள் நடைபெற வேண்டும், போட்டியின்போது பரஸ்பரம் கைகுலுக்கும் நெறிமுறை அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐசிசி வருவாய் பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. ஐசிசி பெறும் மொத்த வருவாயில் 5.75 சதவீதத்தை பிசிபி பெறுகிறது. 2023 புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தான் ஆண்டுதோறும் ஐசிசியிடமிருந்து 34.51 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறது. ஆனால் பாகிஸ்தானைவிட ஆஸ்திரேலியா (128 மில்லியன் டாலர்), இங்கிலாந்து (139 மில்லியன் டாலர்) மற்றும் இந்தியா (293 மில்லியன் டாலர்) ஆகியன அதிக வருமானத்தைப் பெறுகின்றன.
அதேபோல், இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் குறித்த எந்தவொரு முடிவும் இரு நாடுகளின் அரசாங்கங்களிடமே இருப்பதால், இந்தக் கோரிக்கை ஐசிசியின் முன் ஏன் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. காரணம், ஐசிசி ஒரு மத்தியஸ்தராக மட்டுமே செயல்பட முடியும். அந்த இரு நாடுகளையும் விளையாட கட்டாயப்படுத்த முடியாது. 2025 ஆசியக் கோப்பையின்போது பாகிஸ்தானை இந்தியா புறக்கணித்த பின்னணியில், கைகுலுக்கும் நெறிமுறையை அமல்படுத்துவது தொடர்பான மூன்றாவது மற்றும் இறுதி கோரிக்கை வந்துள்ளது.