ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்தார். இதனால் நெட்டிசன்கள், ஒரு சாதாரண வெற்றிக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் வாழ்த்து தெரிவிப்பது தேவையா என எதிர்வினையாற்றுகின்றனர்.
ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் போட்டியாகும். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம் ஆண்டு கோப்பை வென்றது. நடுவில் சில காரணங்களால் நடத்தப்படாமல் இருந்த இத்தொடர் மீண்டும் 2024 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2024, 2025 இரண்டு பதிப்புகளிலும் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் தலைமையில் விளையாடிய இந்திய அணி 10 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது. ஆனால் அப்போதும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றிபெற்றிருந்தது. அதிலும் வெற்றிக்கு பிறகு இந்தத் தொடரிலும் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைக்குலுக்கவில்லை. ஆனால் இந்தமுறை பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வென்றதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்திருக்கும் சூழலில், அவர்கள் இந்தியாவிற்கு எதிரான ஒரு சிறு வெற்றியை கூட எப்படி பார்க்கிறார்கள் என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்துவருகின்றனர்.
2026 ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் சர்வதேச இந்திய டி20 அணிக்கு திரும்பிவிட்டார். இதனால் க்ருணால் பாண்டியா தலைமையில் இந்தியா விளையாடிவருகிறது.
முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் அடித்தது. 89 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே 5 சிக்சர்களை பறக்கவிட்டு வலுவாக தொடங்கியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அந்த அணி 3.5 ஓவரிலேயே 91 ரன்களை அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
இந்தசூழலில் இந்தப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதற்கு இந்தப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதற்கெல்லாமா ஒரு நாட்டின் பிரதமர் வாழ்த்து தெரிவிப்பார் என நெட்டிசன்கள் எதிர்வினையாற்றிவருகின்றனர்.