ஆசியக் கோப்பை தொடர்பாக பிசிசிஐ எழுதிய கடிதத்திற்கு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நக்வி, பதிலளித்துள்ளார்.
துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.
இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.
அதற்குப் பதிலளித்த நக்வி, ”2025 ஆசியக் கோப்பையை வென்றதற்காக உங்களையும் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் அணியையும் நாங்கள் வாழ்த்துகிறோம். அதேநேரத்தில், கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்காக பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்தார். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) ஆதரவாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் களமிறங்கியுள்ளன. இந்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும், மோஷின் நக்விக்கு எழுதியுள்ள கடிதத்தில், "வெற்றி பெற்ற இந்திய அணியிடம் உடனடியாகக் கோப்பையை ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளன. இது நக்விக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடர்பாக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்குக் கடிதம் எழுதியது. அதைப் பெற்றுக் கொண்டதாகக் கூறும் அதன் தலைவர் நக்வி, தற்போது பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ’வரும் நவம்பர் 10ஆம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோப்பையை தாம்தான் வழங்குவேன் என்றும் நக்வி அதில் மீண்டும் கூறியிருக்கிறார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டாலும், இந்தியா இதில் பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஐசிசியின் ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை தொடர்பாகவும் அண்மையில் பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.