துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் ஆசியக் கோப்பையை இந்தியா பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைப்பின் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை, இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனைப் பட்டியலில் இணைந்தது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. அதேநேரத்தில், மேடையில் இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதிநிதி காளித் அல் சரூனி அல்லது பங்களாதேஷின் அமினுல் இஸ்லாம் புல்புல் ஆகியோரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் தயாராக இருந்தனர். ஆனால், நக்வி அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கோப்பையை தன்னோடு எடுத்துக்கொண்டு நக்வி, மைதானத்தைவிட்டு வெளியேறினார். இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படாததையடுத்து, அவர்கள் வெறுங்கையுடன் வெற்றியைக் கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது. மேலும், ஆசியக் கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐசிசியிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் கோப்பையை தருமாறு வலியுறுத்தினர். ஆனால் நக்வியோ, “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, ஆகையால், நான் ஒருபோதும் BCCI-யிடம் மன்னிப்பு கேட்கவில்லை. கேட்கவும் மாட்டேன்”எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கோப்பை வழங்க வேண்டுமென்றால் முறையான ஒரு விழா நடத்தப்பட வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவிர, அந்தக் கோப்பை துபாயில் உள்ள ஏ.சி.சி அலுவலகத்தில், நக்வி கண்காணிப்பில், ஒரு பணயக்கைதியைப் போல மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நக்வியின் இந்தச் செயலுக்கு பாகிஸ்தானே எதிர்வினையாற்றியுள்ளது.
முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி, "நக்வி உடனடியாக பிசிபி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிசிபி உள்துறை அமைச்சகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது, எனவே அதை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இவ்விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ், “நாம் அரசியலின் பக்கத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு விளையாட்டின் பக்கத்தைப் பார்க்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரனாக நாம் விளையாட்டில் மட்டும் இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.