ind, wc, pak x page
கிரிக்கெட்

T20 WC | திடீர் யூ-டர்ன் அடித்த பாக்.. 3 கோரிக்கைகள் நிராகரிப்பு.. இந்தியாவுடன் விளையாடுவது உறுதி!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.

Prakash J

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. வங்கதேச அணிக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியும் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருந்த நிலையில், போட்டியில் பங்கேற்காவிட்டால் கடும் அபராதம் மற்றும் இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்தது.

pcb, icc

இதற்கிடையே, 'ஃபோர்ஸ் மஜூர்' விதியைப் பயன்படுத்துமாறு ஐசிசியிடம் வலியுறுத்தி இருந்தது. ஆனால், அதுதொடர்பாக ஐசிசி விளக்கம் கேட்டிருந்தது. இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தது.

தொடர்ந்து, ஐசிசியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கடந்த 8ஆம் தேதி லாகூரில் பேச்சுவார்த்தை நடத்தின. 5 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவுடன் விளையாடுவது குறித்து அரசுடன் கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், அதற்கு இன்னும் 24 மணி நேரம் அவகாசம் தேவை என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. தவிர, டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை ஐசிசியிடம் வைத்ததாகவும் தகவல் வெளியானது.

pakistan

உலகப் போட்டிகளில் இந்தியாவைப் புறக்கணிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமானால், ஐசிசியால் ஈட்டப்படும் வருவாயில் அதிக பங்கை பாகிஸ்தானுக்கும் அதிகரித்து வழங்க வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு போட்டிகள் நடைபெற வேண்டும், போட்டியின்போது பரஸ்பரம் கைகுலுக்கும் நெறிமுறை அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வைத்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசுடன் ஆலோசித்த பிசிபி தலைவர் மொக்சின் நக்வி, பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற உறுப்பு நாடுகள் அறிவுறுத்தியதன் பேரிலும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகும் இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் வைத்த 3 கோரிக்கைகளையும் ஐசிசி நிராகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.