Ind vs Pak
Ind vs Pak Twitter
கிரிக்கெட்

“சிவராத்திரி, காளி பூஜைக்கெல்லாம்..”- இந்தியா வர ஒப்புக்கொண்டாலும் பாதுகாப்பு அச்சத்தில் பாகிஸ்தான்!

Rishan Vengai

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றங்களால் சுமூகமான சூழல் இல்லாத நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையே எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாமல் உள்ளது. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் 2 அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிவரும் நிலையில், சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால் ‘ஆசியகோப்பையில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் உலகக்கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வராது’ என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

Ind vs Pak

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமல்லாமல் அந்நாட்டின் அரசும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கு இந்தியாவிற்கு சென்று விளையாட அனுமதி மறுத்தது. ‘விளையாட வேண்டுமானால் போட்டியின் இடமாற்றங்களை உறுதிசெய்ய வேண்டும், அகமதாபாத் போன்ற கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’ என்ற பல நிபந்தனைகளை வைத்தது. ஆனால் அவர்களின் எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காத ஐசிசி தரப்பு, போட்டிக்கான கால அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு ஒரு உயர்மட்டக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தபின்னரே முடிவை வெளியிடும் என்று தெரிவித்திருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி இந்தியா வருமா என்ற குழப்பங்கள் நீடித்தது. அனைத்து குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் அணி இந்தியா வருவதை உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு.

“விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது என்பதை பாகிஸ்தான் வலியுறுத்துகிறது!”

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்தியாவுடனான இருநாட்டு உறவுகளின் நிலை, அதன் சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்பதையும் பாகிஸ்தான் மதிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ind vs Pak

தொடரும் ஆசியக்கோப்பை சர்ச்சை...

பாகிஸ்தானின் இந்த அறிக்கை, இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆசியகோப்பையில் விளையாட மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ‘இந்தியாவின் உறுதியற்ற அணுகுமுறைக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமான பொறுப்பான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது’ என கூறுகின்றனர் விமர்சகர்கள்.

முன்னதாக இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு போட்டிகள் மாற்றப்படும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மைதானங்களில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கும் ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2-ம் தேதியில் இலங்கை பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் மட்டுமே நடைபெறவிருக்கிறது.

சிவராத்திரி, காளி பூஜைகளுக்காக போட்டி மாற்றப்படுவதால் அச்சத்துடன் இருக்கும் பாகிஸ்தான்!

இதற்கிடையே உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை பல மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி இந்து பண்டிகையான நவராத்திரி அன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என உள்ளூர் காவல்துறை வலியுறுத்தியது. பிரச்னை குறித்து ஐசிசிக்கு பிசிசிஐ எச்சரிக்கை செய்தி அனுப்பியதை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் 14ஆம் தேதிக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனால் அக்டோபர் 12ஆம் தேதியில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கான போட்டியும் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்தியாவுடனான போட்டிக்கு தயாராவதற்காக போதுமான நேரம் கொடுக்கப்பட்டதையடுத்து, மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஏற்றுக்கொண்டது.

Ind vs pak

ஆனால் அதைத்தொடர்ந்து நவம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் கொண்டாடப்படும் காளி பூஜை பண்டிகையை முன்னிட்டு, அதே தேதியில் அங்கு நடைபெறும் பாகிஸ்தான் அணியின் போட்டியை மாற்றுமாறு கேட்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 12-ல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அந்த போட்டியையும் பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக மாற்றவேண்டும் என பெங்கால் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கான மாற்றங்கள் குறித்து இன்னும் எந்த தகவலையும் ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.

Ind vs Pak

தொடர்ந்து இதுபோன்ற பாதுகாப்பு பிரச்னைகள் எழுப்பப்படுவதை அடுத்து, பாகிஸ்தான் அரசு வீரர்களை அனுப்ப ஒப்புக்கொண்டாலும் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.