Haris Rauf
Haris Rauf cricinfo
கிரிக்கெட்

“School Fees கட்ட சந்தைகளில் தின்பண்டங்கள் விற்றேன்”-தந்தையின் அழுகையை கூறும் ஹரிஸ் ராஃப்!

Rishan Vengai

கிரிக்கெட் - ஏழ்மையில் இருந்து கனவுகளோடு வந்த பல வீரர்களின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொடுத்துள்ளது. காப்பாற்றிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியும் கொடுத்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அத்தனை நாடுகளிலும் ஏழ்மையின் பிடியில் இருந்து வந்த வீரர்களை கிரிக்கெட் காப்பாற்றியுள்ளது. கிரிக்கெட் மீது உங்களுக்கு தீவிர காதல் இருந்தால், அதற்காக நீங்கள் உங்கள் முழு உழைப்பையும் போடக்கூடியவராக இருந்தால், கிரிக்கெட் உங்களை நிச்சயம் உச்சத்தில் நிறுத்திவைக்கும். அதுதான் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த மாயாஜாலம் என்று கூறலாம்.

அப்படி மாயாஜலம் நிகழ்ந்த ஒருவர்தான், பாகிஸ்தானில் பிறந்து ஏழ்மையில் உழன்ற பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான ஹரிஸ் ராஃப். இவர் தன்னுடைய கடினமான காலத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தின்பண்டம் விற்பேன்! - ஹரிஸ் ராஃப்

கிறிக் இன்ஃபோ நடத்திய “The incredible rise of Haris Rauf” என்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஸ் ராஃப், “எனது குடும்பம் கூட்டுக்குடும்பமாக இருந்தது. என் தந்தையின் சகோதரர்களுக்கும் திருமணமாகி குடும்பம் பெரிதாக நாங்கள் கிட்சனில் படுத்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்தோம். என் அப்பாவின் சம்பளம் எங்களுடைய சாப்பாட்டிற்கே போதுமானதாக இருந்தது. மெட்ரிகுலேஷன் முடிந்த பிறகு எனது கல்வி கட்டணத்தைச் செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தின்பண்டங்கள் விற்கும் சந்தையில் வேலை செய்தேன்.

Haris Rauf

நான் பள்ளி முடிந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது எனது தந்தையால் எந்த உதவியும் செய்ய முடியாமல் போனது. என்னாலும் அதற்கான கட்டணத்தை கட்டும் அளவுக்கு வேலை செய்யமுடியவில்லை. அப்போது எனக்கு கிரிக்கெட்தான் உதவியாக இருந்தது. பள்ளி முடிந்தவுடன் உடை மாற்றிக்கொண்டு ஓடிவிடுவேன், டேப்-பால் கிரிக்கெட்டை விளையாடி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கட்டணம் செலுத்தினேன். விளையாடி வரும் அழுக்கு சட்டையோடுதான் என்னால் மறுநாள் காலை வரை இருக்க முடியும், பின்பு அதே போல தினமும் ஓடுமாறு என்னை வறுமை துரத்தியது” என்று கூறியுள்ளார்.

என் அப்பா நான் முதல் முறையாக கார் வாங்கும் போது தேம்பி அழுதார்!

மேலும் பேசிய அவர், “சிறிய கிட்சனில் குடும்பமே இருந்ததால், எனது அம்மாவின் பெரிய கனவாக சொந்த வீடு என்பதே இருந்தது. கிரிக்கெட்டில் விளையாடியதற்கு பிறகுதான் என்னால் வீடு மற்றும் கார் வாங்க முடிந்தது. நான் முதன்முதலில் கார் வாங்கும் போது என் அப்பா தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

Haris Rauf

அப்போது அவர் சொன்னதுதான் என் சிறுவயது வாழ்க்கையாகவே இருந்தது. ஒருவேளை கிரிக்கெட் இல்லையென்றால் நான் அப்படித்தான் இருந்திருப்பேன். ‘இப்படிலாம் கார்ல உட்கார்ர தகுதி எனக்கு வரும்னு கனவுல கூட நினைச்சு பார்க்கல’ என தேம்பி அழுதபடி சொன்னார் அப்பா. அவ்வளவுதான் வாழ்க்கை. என் குடும்பம் சந்தோஷமாக இருந்தால், நான் சந்தோஷமாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

வறுமையின் பிடியில் இருந்த இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட்டர்களில்கூட நாம் நினைத்து கூட பார்க்காத பல வீரர்கள் ஏழ்மையின் பிடியில் இருந்துள்ளனர். அப்படியான சிலரை பார்ப்போம்...

உமேஷ் யாதவ் : உமேஷ் யாதவின் தந்தை நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்தார். 2 வேளை உணவை கூட பெற முடியாமல் கஷ்டப்பட்டார்.

ஜாகீர் கான்: வறுமையின் பிடியில் இருந்த ஜாகீர், மருத்துவமனையை ஒட்டியிருக்கும் சிறிய அறையில் தங்கியிருந்தார்.

ஹர்பஜன் சிங்: இந்திய அணியில் இடம்பிடித்தும் 3 ஆண்டுகள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த ஹர்பஜன், வறுமையால் டாக்ஸி ஓட்ட முடிவு செய்தார்.

Jadeja

ஜடேஜா: இன்று நம்பர் 1 ஆல்ரவுண்டராக வலம்வரும் ஜடேஜாவின் சிறுவயது வறுமையால் சூழ்ந்தது. அவருடைய தந்தை ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை செய்தார்.

சேவாக்: சேவாக்கின் தந்தை கோதுமை விற்கும் தொழிலாளி. 50 பேர் கொண்ட இவரது குடும்பம், ஒரே வீட்டில் வசித்துவந்தனர். அத்தகைய சூழ்நிலையில் வளர்ந்த சேவாக் கிரிக்கெட் விளையாடுவதற்காக 84கிமீ பயணித்தார்.

முகமது ஷமி: விவசாயியான இவரது தந்தை, வறுமையிலும் மகனின் கிரிக்கெட் ஆசைக்காக 30கிமீ சைக்கிள் மிதித்து விளையாட அழைத்து சென்றுள்ளார்.

Hardik

பும்ரா: 5 வயதில் தந்தையை இழந்தவரான பும்ரா, தாயுடன் ஏழ்மையான சூழலில் வளர்ந்தவர். கிரிக்கெட் விளையாட ஒரேயொரு டீசர்ட் மற்றும் ஷூ-வை வைத்துக்கொண்டு தினமும் அதையே துவைத்து அலசி போட்டுக்கொண்டு சென்று விளையாடியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா: சிறு கடையை நடத்தி வந்த ஹர்திக் பாண்டியாவின் தந்தை, மகன்களின் கிரிக்கெட் ஆசைக்காக அதை விற்றுவிட்டு அவர்களை அகாடமியில் சேர்த்துள்ளார். கடினமான வறுமையை சந்தித்த ஹர்திக் குடும்பம், சுமார் 1 வருடமாக காலையும், மதியமும் 5 ரூபாய் மேகியை சமைத்து உண்டுள்ளனர்.

இந்த வரிசையில் எம்எஸ் தோனி, நடராஜன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முனாஃப் பட்டேல், புவனேஷ்வர் குமார், இர்ஃபான் பதான் போன்ற பல இந்திய வீரர்கள் அடங்குவர்.