இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மோதல் web
கிரிக்கெட்

கிரிக்கெட் மைதானமா... போர்க்களமா? களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த சர்ச்சை செயல்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

PT WEB

சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதற்கெதிரான இந்தியாவின் சிந்தூர் ஆபரேசன் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டு சற்று தணிந்திருக்கும் நிலையில், ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளில் கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகம் நபர்கள் பார்க்கக்கூடிய ஒரு போட்டியாகவும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான போட்டி இருக்கிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் இந்தியா எளிதாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வந்தாலும், தொடர்ந்து இந்த போட்டிக்கான மவுஸ் மட்டும் குறையாமல் இருந்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான்

இந்நிலையில், நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இடையேயான போட்டியை இந்தியா தவிர்க்க வேண்டும் என இந்தியா முழுதும் பல குரல்கள் எழுந்து வந்தன. ஆனால் லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்தியா அந்த போட்டியில் வென்றபிறகு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததாகவும், எப்போதும் உயிர்நீத்தவர்களின் பக்கம் தாங்கள் இருப்பதாகவும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

தொடர்ந்து, அந்தப்போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த நிலையில் தான், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தப்போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்றைய இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் சில நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தன. பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்தவுடன் பேட்டை கையில் பிடித்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவதுபோல காட்டினார்.

அதேபோல மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் ஒரு விமானம் பறந்துகொண்டிருப்பது போலவும் திடீரென அது கீழே விழுவது போலவும் சைகை செய்து காட்டினார், மேலும் 6 என்ற எண்ணிக்கையும் அவர் கை விரல்களால் காட்டினார். இந்தியாவின் 6 விமானங்களை ஆபரேஷன் சிந்தூரின்போது வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், அதை மறைமுகமாக கூறும் வகையில் ஹாரிஸ் ராஃப் செய்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்பாடுகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவில் எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்ட இந்திய அணி துணை கேப்டன் ஷுப்மன் கில், ஆட்டம்தான் பேசும்... பேச்சுகள் அல்ல... என பதிவிட்டிருந்தார். சரவெடி ஆட்டம் ஆடி இந்தியாவின் வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்திய அபிஷேக் சர்மாவும் இதேபோன்ற பதிவை இட்டுள்ளார். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்... நாங்கள் ஜெயித்துக்கொண்டே இருக்கிறோம் என அவர் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக தளங்களில் விளையாட்டு குறித்து பதிவிடுவது அரிது என்ற நிலையில் இப்பதிவுகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த சைகைகளுக்கு சரியான பதிலடியாகவும் இப்பதிவுகள் பார்க்கப்படுகின்றன.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவில் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியாவும் பாகிஸ்தானும் தற்கால கிரிக்கெட்டில் போட்டியாளர்கள் என்பதை ஏற்கமுடியாது எனவும், சரி சமமான போட்டியாளர்கள் என்றால் வெற்றி தோல்விகளும் ஏறக்குறைய சமமாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் பாகிஸ்தானுடனான போட்டிகளில் மிகப்பெரும்பாலானற்றில் இந்தியாவே வென்றுள்ளதாகவும், இனிமேல் இதை ரைவல்ரி என்று குறிப்பிடாதீர்கள் என்று தெரிவித்திருந்தார்.