பாகிஸ்தானில், தற்போது நடைபெற்று வரும் பிரசிடென்ட்ஸ் டிராபி தொடரில், 232 ஆண்டுகள் பழைமையான ஒரு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரசிடெண்ட்ஸ் டிராபி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், பாகிஸ்தான் டிவி அணி 232 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்து புதிய் வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் சுய் நொதர்ன் கேஸ் அணிக்கு எதிராக 40 ரன்கள் என்ற மிகக் குறைந்த இலக்கை வெற்றிகரமாகத் தற்காத்து பாகிஸ்தான் டிவி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் டிவி அணி 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய சுய் நொதர்ன் கேஸ் அணி 238 ரன்களைக் குவித்து, அந்த அணியுடன் 72 ரன்கள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் டிவி அணி 111 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் எதிரணிக்கு வெறும் 40 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி பெறுவது மிக எளிது எனக் கருதப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான் அபாரமாகப் பந்துவீசி 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் சுய் நொதர்ன் அணி வெறும் 37 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்ததுடன் வெறும் 2 ரன்னில் தோல்வியையும் தழுவியது. முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இந்தளவு குறைந்த ரன்களைப் பாதுகாத்து ஓர் அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 1794ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஓல்ட்ஃபீல்ட் அணி, MCC அணிக்கு எதிராக 41 ஓட்டங்களைப் பாதுகாத்து வெற்றி பெற்றதே 232 ஆண்டுகால உலக சாதனையாக இருந்தது. அந்த நீண்டகால சாதனையை தற்போது பாகிஸ்தான் டிவி என்ற அணி தகர்த்துள்ளது.