pakistan team
pakistan team twitter
கிரிக்கெட்

ஹைதராபாத்: ஹோட்டலில் ருசித்து சாப்பிட்ட பாக்.வீரர்கள்; பயந்துபோன பயிற்சியாளர்கள். ஷதாப் கான் கலகல!

Prakash J

இந்தியாவில் 50 ஓவர் ஆடவர் உலகக்கோப்பைக்கான போட்டிகள் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளன. இதற்கான அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வந்த ஒவ்வொரு அணி வீரர்களுக்கான மெனு பட்டியல் வெளியாகியது. அதில், எந்த அணிக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மாட்டிறைச்சி இல்லாத நிலையில் அனைத்து அணிகளுக்கும் வித்தியாசமான மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் மட்டன் சாப்ஸ், ஆட்டிறைச்சி குழம்பு, பட்டர் சிக்கன், வறுத்த மீன் மற்றும் பாசுமதி அரிசி, ஸ்பாகெட்டி மற்றும் போலொனிஸ் சாஸ், காய்கறி புலாவ் மற்றும் ஹைதராபாத் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த செப். 29ஆம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டி முடிந்தவுடன், பாகிஸ்தான் வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற அசைவ உணவகமான ஜுவல் ஆஃப் நிஜாமுக்குச் (Jewel of Nizam) சென்று உணவருந்தினர். 700 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியை ஆண்ட ஹைதராபாத் நிஜாம்களின் நினைவாக இவ்வுணவகத்துக்கு அந்தப் பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத் உணவு வகைகளுக்கு இந்த உணவகம் பெயர்போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அந்த உணவகத்துக்குச் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாக உணவு உண்டதுடன், அந்த ஹோட்டலில் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மேலும், அந்த உணவகத்தின் அத்தனை சிறந்த உணவுகளையும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவிற்கு தயாரித்து அளித்தனர். அதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பே பகிர்ந்து இருந்தது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த உணவகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து, அவ்வணியின் பயிற்சியாளர்களே மிரண்டு போய் உள்ளனர். அதாவது, ‘எங்கே ஒரே நாளில் வீரர்கள் எடையை அதிகமாக்கிக் கொள்வார்களோ என பயந்துபோய், ’கொஞ்சம் பார்த்துச் சாப்பிடுங்கள்’ எனக் கூறி இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் (தலைமை, பேட்டிங், பவுலிங்) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரர் ஷதாப் கான் பேட்டி ஒன்றில் சிரித்தபடியே, ”அங்கே சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் பயிற்சியாளர் குழு, நாங்கள் எங்கே குண்டாகி விடுவோமோ என கவலைப்பட்டனர்” எனத் தெரியப்படுத்தியுள்ளார்.