ali raza
ali raza ICC
கிரிக்கெட்

ஆஸியை திணறடித்த பந்துவீச்சு! தோற்றாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த 15 வயது பாகிஸ்தான் வீரர் அலி ராசா!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் 2024 யு19 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்ல 16 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றன.

முதல் அரையிறுதிப்போட்டி: கண்ணீர் விட்ட தென்னாப்பிரிக்கா வீரர்கள், நெகிழ வைத்த இந்திய கேப்டன்!

இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான முதல் அரையிறுதிப்போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற நிலையில், விறுவிறுப்பான போட்டியில் இறுதிவரை போராடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக சென்றது.

ind vs sa

ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாற, தென்னாப்பிரிக்கா அணியே வெற்றிப்பெற போகிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட சச்சின் தாஸ் மற்றும் கேப்டன் சாஹரன் இருவரும் ஒரு த்ரில் வெற்றிக்கு இந்தியாவை அழைத்துச்சென்றனர். ராஜ் லிம்பனியின் அசத்தலான சிக்சரால் 2 விக்கெட் வித்தியாசத்தில் நூலிழையில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டி முடிந்த பிறகு கண்ணீர்விட்ட தென்னாப்பிரிக்கா வீரர்களை, இந்திய கேப்டன் கட்டியணைத்து ஆற்றுப்படுத்தியது பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2வது அரையிறுதிப்போட்டி: தனியொருவனாக பாகிஸ்தானை தோளில் சுமந்த அலி ராசா!

இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா பவுலர் டாம் ஸ்ட்ரேக்கர், பாகிஸ்தான் அணியை 179 ரன்களுக்குள் சுருட்டினார்.

180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் 15 வயது இளம்வீரர் அலி ராசா. உபைத் ஷா, நவீத் இருவரும் தொடக்க வீரர்களை வெளியேற்ற, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அரஃபத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அழுத்தத்திற்குள் தள்ளினார். மற்றபவுலர்கள் தங்களுடைய 30% வேலையை பார்த்துக்கொள்ள, மீதமிருக்கும் போட்டியை தனியொரு ஆளாக தோள்களில் சுமர்ந்தார் அலி ராசா.

ali raza

102 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா மெதுவாக இலக்கை நோக்கி நகர, 6வது விக்கெட்டுக்கு ஒலிவர் மற்றும் டாம் காம்பெல் இருவரும் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு போட்டியை தங்கள் கையில் வைத்திருந்தனர். ஒலிவர் அரைசதத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஒலிவரா அலி ராசாவா என போட்டி மாற ஆட்டம் அனல் பறந்தது.

25 பந்துகளுக்கு 16 ரன்கள் என போட்டியிருந்த போது அவுட் ஸ்விங், குயிக் பவுன்சர் என மிரட்டிய அலி ராசா, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைக்கும் எதிராக நின்றார். ஒலிவருக்கு எதிராக அலி ராசா வீசிய ஒவ்வொரு பந்தும் விக்கெட் எடுக்கும் பந்தாக மாற, களத்தில் வீரர்கள் சத்தமிட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் 49 ரன்களில் இருந்த ஒலிவரை வெளியேற்றிய அலி ராசா, ஆஸ்திரேலியா கேப்டனின் கண்களில் கண்ணீரையே வரவைத்தார். அடுத்த 2 ஓவர்களை மெய்டனாக வீசிய அலி, அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளை வீழ்த்த 164 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி தோல்வியின் விளிம்பிற்கே சென்றது.

ali raza

ஆனால் அலி ராசாவின் போராட்டத்தை வெற்றிக்கு அழைத்துச்செல்ல தவறிய மற்ற பாகிஸ்தான் பவுலர்கள் போட்டியை 1 விக்கெட் வித்தியாசத்தில் கோட்டைவிட்டனர். கடைசி 6 பந்துக்கு 3 ரன்கள் என போட்டி மாறிய போது, விக்கெட் கீப்பர் பின்னால் எட்ஜாகி சென்ற பந்து பவுண்டரிக்கு செல்ல ஆஸ்திரேலியா ஒரு த்ரில் வெற்றியை ருசித்தது. எப்படியிருந்த போதும் இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதர்ச நாயகன் என்றால் அது 15 வயதேயான அலி ராசா தான்!