பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்திய அரசாங்கத்தை விமர்சித்திருப்பதும் ராகுலைப் பாராட்டியிருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடரில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியினர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்திய அரசாங்கத்தை விமர்சித்திருந்தது பேசுபொருளானது. பாகிஸ்தானின் ’சம்மா டிவி’யின் உரையாடலின்போது பேசிய அவர், “இது, ஒரு இழிவான மனநிலை. இந்தியாவில் உள்ள அரசு, இந்துக்கள் – இஸ்லாமியர்கள் என்று பேசி அதிகாரத்தில் தொடர்கிறது. இது தவறான போக்கு. ராகுல் காந்தி மிகவும் நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ளார். அவர் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார். நீங்கள் இன்னொரு இஸ்ரேலாக மாற முயற்சிக்க ஒரு இஸ்ரேல் போதாதா” எனத் தெரிவித்திருந்தார்.
அப்ரிடியின் கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ராகுல் காந்தி பாகிஸ்தானின் செல்லப் பிராணி. ஷாஹித் அப்ரிடியும் பாகிஸ்தான் மக்களும் ராகுல் காந்தியைத் தங்கள் தலைவராகக்கூட ஆக்க முடியும்" என்றார்.
பாஜகவின் ஐடி துறைத் தலைவர் அமித் மாளவியாவும் ராகுலை விமர்சித்தார். அவர், "இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாத தீவிர இந்து வெறுப்பாளர் ஷாஹித் அப்ரிடி, காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று கனவு காண்கிறார். திடீரென்று ராகுல் காந்தியைப் பாராட்டுகிறார். ராகுல் பாகிஸ்தானுடன், பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் என்று அப்ரிடி கூறுகிறார். அதே நேரத்தில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கையை காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியைத் தாக்குகிறார். இந்தியாவை வெறுக்கும் ஒவ்வொருவரும் ராகுல் காந்தியிடம் ஒரு நண்பரைக் கண்டுபிடிப்பது ஏன்? பாரதத்தின் எதிரிகள் உங்களுக்காக உற்சாகப்படுத்தத் தொடங்கும்போது, உங்கள் விசுவாசம் எங்கே இருக்கிறது என்பது இந்திய மக்களுக்குத் தெரியும்” எனப் பதிவிட்டார்.
பாஜகவின் விமர்சனத்திற்குப் பதிலளித்த சிவசேனா (UBT) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, "இந்த ஷாஹித் அப்ரிடி சில மாதங்களுக்கு முன்பு பாஜக எம்.பி.க்களுடன் பழகினார். துபாயில் எல்லோரும் கட்டிப்பிடிப்புகளையும் நட்பையும் பார்த்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் மாளவியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஷாஹித் அப்ரிடியுடன் அனுராக் தாக்கூர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "நீங்கள் இனிமையாகப் பேசுகிறீர்கள்... நட்பைப் பேணுகிறீர்கள், எங்களிடம் கேள்விகள் கேட்பீர்களா” எனப் பதிவிட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, ஷாஹித் அப்ரிடியை கடுமையாக சாடினார். "இப்போது அவரது மருமகன் இந்திய பேட்ஸ்மேன்களால் தாக்கப்படுவதால், இந்தியாவுக்கு எதிரான கூச்சல்கள் எப்போதையும்விட அதிகமாக உள்ளன. ஒருவேளை அப்ரிடி பிறந்தநாள் மற்றும் சாக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்திவிட்டு, ஸ்கோர்போர்டை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்" என்று பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியைக் குறிப்பிட்டு சிங்வி பதிவிட்டுள்ளார்.