3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டேரியல் மிட்செல் பெற்றுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளும் ஏற்கெனவே 1-1 என சமன் பெற்றிருக்கும் நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த அணி, தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், மிட்செல், பிளிப்ஸ் ஆகியோரின் நிலையான ஆட்டத்தால், அந்த அணி 300 ரன்களைச் சுலபமாகக் கடந்தது. 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரியல் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினர். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, பின்னர் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
குறிப்பாக, இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 219 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இந்தப் போட்டியில் மிட்செல் மற்றும் பிளிப்ஸ் இருவருமே சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினர். இறுதியில் அந்த அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. டேரியல் மிட்செல் 137 ரன்களிலும் கிளென் பிளிப்ஸ் 106 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 84 ரன்களை வாரி வழங்கினார்.
இதற்கிடையே, இந்தத் தொடரில் டேரியல் மிட்செல் மொத்தம் 352 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டேரியல் மிட்செல் பெற்றுள்ளார். மேலும், இந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரியல் மிட்செல் 50 ரன்கள் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
2023ஆம் ஆண்டு 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிராக 130 ரன்கள், மீண்டும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 134 ரன்கள் அவர் அடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் நடப்புத் தொடரில் ஓர் அரைசதம், இரண்டு சதம் என அவர் ரன்வேட்டை நடத்தியுள்ளார். தவிர, இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடர்களில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும் அவர் 4 முறை இடம்பிடித்துள்ளார்.