உலகக்கோப்பை, மாட்டிறைச்சி
உலகக்கோப்பை, மாட்டிறைச்சி கோப்புப் படம்
கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடர்: வெளிநாட்டு வீரர்களின் உணவில் மாட்டிறைச்சிக்கு இடமில்லை?!

Prakash J

இந்தியாவில் 50 ஓவர் ஆடவர் உலகக்கோப்பைக்கான போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளன. இதற்கான விழாக்கள் தயாராகி வருகின்றன. தற்போது அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வந்த ஒவ்வொரு அணி வீரர்களுக்கான மெனு பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், எந்த அணிக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், மாட்டிறைச்சி இல்லாத நிலையில் அனைத்து அணிகளுக்கும் வித்தியாசமான மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மெனுவில் மாட்டிறைச்சி சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, இந்தியா வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்தப் பட்டியலில் மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக ஆட்டிறைச்சி, கோழிக்கறி, மீன் போன்ற அசைவ உணவு வகைகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் மட்டன் சாப்ஸ், ஆட்டிறைச்சி குழம்பு, பட்டர் சிக்கன், வறுத்த மீன் மற்றும் பாசுமதி அரிசி, ஸ்பாகெட்டி மற்றும் போலொனிஸ் சாஸ், காய்கறி புலாவ் மற்றும் ஹைதராபாத் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது.

இந்தியாவில் பசு புனிதமாக சிலரால் கருதப்படுகிறது. எனவே, நாட்டின் பல பகுதிகளில் பசுக்களைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி கொண்டு செல்வோரும், விற்பனை செய்வோரும்கூட பசு காவலர்களால் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இதன்காரணமாகவே இந்திய அரசு உலகக்கோப்பை வீரர்களுக்கு மாட்டிறைச்சியை தடை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆதலால், நெட்டிசன்கள் பலர் இதுதொடர்பாகா விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.