2025-ம் ஆண்டு ஏற்கனவே விராட் கோலி, ரோகித் சர்மா, மேக்ஸ்வெல், ஆஞ்சிலோ மேத்யூஸ், ஹென்றிச் கிளாசன் போன்ற வீரர்களின் ஓய்வை பார்த்துவிட்ட நிலையில், தற்போது சமகாலத்தில் தலைசிறந்த வீரராக விளங்கிவரும் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
வெறும் 29 வயதேயாகும் நிக்கோலஸ் பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்காத நிலையில் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் நிக்கோலஸ் பூரன் இடம்பெறவில்லை, அதேபோல 2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் அணியிலும் இடம்பெறவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டில் என்ன நடக்கிறது என்பது தற்போதுவரை புரியாத மர்மமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் டி20 கேப்டனாக இருந்த ரோவ்மன் பவல், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னாள் வீரர் பிராவோ பகிரங்கமாக கிரிக்கெட் போர்டை சாடியிருந்தார்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரரான நிக்கோலஸ் பூரன் ஓய்வை அறிவித்திருப்பது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு பெரிய இழப்பாக இருக்கப்போகிறது. நிக்கோலஸ் பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டனாக வழிநடத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வை அறிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நிக்கோலஸ் பூரன், “நிறைய யோசித்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது, தொடர்ந்து கொடுக்கும் என நம்புகிறேன். கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மக்களுக்காக பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும், அந்த மெரூன் நிறத்தை அணிந்துகொள்வதும், தேசிய கீதத்திற்காக நிற்பதும் என ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது எனக்கு அனைத்தும் கிடைத்துவிட்டதை போல உணர்ந்தேன். உண்மையிலேயே அதன் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டனாக வழிநடத்தியது ஒரு பாக்கியம், நான் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி” என்று எழுதியுள்ளார்.
2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்ற பூரன், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்களையும், 106 டி20 போட்டிகளில் விளையாடி 2275 ரன்களையும் குவித்துள்ளார். கிரிக்கெட்டில் தன் வாழ்நாள் ஃபார்மில் இருந்துவரும் நிக்கோலஸ் பூரன், தொடர்ந்து பிரான்சைஸ் லீக் போட்டிகளில் விளையாடுவார்.